திமுக கூட்டணியில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளைக் கேட்போம் என்று இரண்டு கம்யூனிஸ்ட்களும் ஒரே குரலாக ஒலித்திருக்கும் நிலையில் அடுத்த அதிரடியாக, அமைச்சர்கள் நேரு, அன்பில் மகேஸ் தொகுதிகளை தங்களுக்குக் கேட்க வேண்டும் என தீர்மானமும் நிறைவேற்றி இருக்கிறார்கள் தில்லான தோழர்கள்.
திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு கூட்டத்தில் திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம் ஆகிய தொகுதிகளை இம்முறை திமுக-விடம் கேட்டுப் பெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி தலைமைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். இதேபோல் மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டக்குழு கூட்டத்தில் திருவெறும்பூர், மணப்பாறை தொகுதிகளை கேட்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி மாநிலக் குழுவுக்கு அனுப்பி இருக்கிறார்கள்.
இதில் திருச்சி மேற்கு அமைச்சர் கே.என்.நேருவின் தொகுதி. திருவெறும்பூர் அமைச்சர் அன்பில் மகேஸின் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சர்களின் தொகுதிகளை கேட்டு தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறீர்களே… நடக்கிற காரியமா? என்று திருச்சி மாவட்ட மூத்த கம்யூனிஸ்ட் நிர்வாகிகளிடம் கேட்டதற்கு ‘‘நாங்கள் விருப்பம் தெரிவித்துள்ள அமைச்சர்களின் தொகுதிகள் இரண்டிலும் ஏற்கெனவே எங்கள் கட்சிகளின் தலைவர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். அந்த இரண்டு தொகுதிகளிலுமே கிளை அமைப்பு வரை கம்யூனிஸ்ட் கட்சி வலுவாக உள்ளது.
அரசியலில் எதுவும் சாத்தியம்தான். அதுவும் கூட்டணி அரசியலை பொறுத்த வரை எதுவும் நடக்கலாம். அதனால் நாங்கள் வலிமையாக உள்ள, வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகள் என்று குறிப்பிட்டு திருச்சி மேற்கையும் திருவெறும்பூரையும் கேட்டுள்ளோம். அமைச்சர்கள் தொகுதி என்பதால் அவற்றைக் கேட்கவில்லை. எங்களுக்கு சாதகமான தொகுதிகள் என்பதால் தான் கேட்கிறோம்’’ என்றனர்.




