தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை எழுதிய ரகசிய கடிதம் வெளியான விவகாரம் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
திருச்சியை சேர்ந்த வழக்கறிஞர் பரஞ்சோதி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் அண்மையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு விசாரணைக்காக கடந்த மாதம் 26-ம் தேதி ஆஜரானபோது, மருது சேனையின் தலைவர் ஆதிநாராயணன் தாக்கல் செய்த பொதுநல மனு விசாரணைக்கு வந்தது.
அவர் தனது மனுவில் தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை அனுப்பிய ரகசிய கடிதத்தின் நகலை இணைத்து, அந்த கடிதத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யக் கோரியிருந்தார். ஆதி நாராயணன் என்பவர் மீது தமிழகத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் உள்ளது.
டிஜிபிக்கு அனுப்பிய ரகசிய கடிதம் அவருக்கு எப்படி கிடைத்தது என்பது புதிராக உள்ளது. அந்த வழக்கு விசாரணையின்போது நீதிபதிகளே மனுதாரருக்கு அமலாக்கத் துறையின் கடிதம் எப்படி கிடைத்தது என கேள்வி எழுப்பினர்.
நடவடிக்கை எடுக்கவில்லை: எனவே, டிஜிபிக்கு அமலாக்கத்துறை அனுப்பிய ரகசிய கடிதம் மனுதாரருக்கு எவ்வாறு கிடைத்தது என்பது விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.
இந்த ரகசிய கடிதத்தை மனுதாரருக்கு வழங்கிய அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியினர், உதவிய வழக்கறிஞர்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும். இது தொடர்பாக டிஜிபிக்கு மனு அனுப்பினேன் நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபருக்கு அமலாக்க துறையின் ரகசிய கடிதம் எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரிக்கவும், அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி எஸ்.மதி முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், அமலாக்கத் துறையின் ரகசிய கடிதம் வெளியான விவகாரத்தில் மத்திய, மாநில அரசு அதிகாரிகள், வழக்கறிஞர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு முதல்கட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்து கொண்டு வழக்கை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், அமலாக்கத்துறை எழுதிய கடிதம் வெளியான விவகாரம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க டிஜிபி (பொறுப்பு) வெங்கடராமன் உத்தரவிட்டுள்ளார்.





