“அமைச்சர் நிர்மல் குமார் தனது துறை ஊழல் முறைகேடுகளை மறைக்க என் மீது பழி சுமத்துகிறார்” – பி.மூர்த்தி

 “தனது துறைகளில் நடக்கும் ஊழல், முறைகேடுகளை மறைப்பதற்காக அமைச்சர் நிர்மல் குமார் என் மீது அடிப்படை ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்,” என முன்னாள் அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.

மதுரையில் முன்னாள் பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: கோயில் நிலத்தை தனி நபர்கள் பத்திரப்பதிவு செய்ய முடியாதபடி ஆவணங்களில் உரிய குறிப்புகள் இடம்பெற்று இருக்கும்.

கடந்த 5 ஆண்டு திமுக ஆட்சியில் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டு பாதுகாக்கப்பட்ட  பழநி கோயில் நிலம், தவெக ஆட்சியில் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் பின்னணியில் யார் இருந்தாலும் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

பழநி கோயில் நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்தது, தமிழகம் முழுவதும் மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் லஞ்சம் பெறப்பட்டதாக எழுந்துள்ள புகார், 200 யூனிட் இலவசம் என அறிவித்துவிட்டு மின்கட்டணத்தை உயர்த்தி மக்களை ஏமாற்றியது உள்ளிட்ட தவெக அரசில் நடந்த முறைகேடுகள் மற்றும் புகார்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினால் அதற்கு உரிய பதிலை அமைச்சர் நிர்மல் குமார் அளிப்பதில்லை.

தமிழகத்தில் உள்ள அனைத்து அமைச்சர்களின் துறைகள் பற்றியும், கூட்டணி கட்சிகளின் அரசியல் குறித்து பேசி வருகிறார். நான் 48 ஆண்டுகளாக ஒரே கட்சியில் இருந்து மக்கள் பணியாற்றி வருகிறேன். நிர்மல் குமார் அதிமுக, ஆர்எஸ்எஸ், பாஜக என பல இடங்களில் இருந்தவர். அப்போது திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அவர் என்ன பேசினார் என எல்லோருக்கும் தெரியும்.

சட்டம் மற்றும் மின்சார துறைகளில் நடக்கும் முறைகேடுகளை மறைக்க என்னை பற்றி தொடர்ந்து அடிப்படை ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டுகளை  அமைச்சர் நிர்மல் குமார் பரப்பி வருகிறார்.

தமிழகத்தில் உள்ள 589 பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் ஏஜென்ட்டை நியநித்து 20 சதவீதம் கமிஷன் பெற்றதாக பொய்யான குற்றாட்டுகளை முன்வைக்கிறார். எனது ஐந்தாண்டு கால பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பதவிக்காலத்தில் ரூ.94 ஆயிரம் கோடியாக இருந்த அரசின் வருவாயை  ரூ.1.68 லட்சம் கோடியாக உயர்த்தி காட்டி உள்ளேன்.

தனிப்பட்ட தேவைகளுக்கோ, சிபாரிசு அடிப்படையிலோ எந்தவொரு பத்திரப்பதிவு அலுவலரிடம் போனில் கூட பேசியது இல்லை. எனது அதிகாரத்தை பயன்படுத்தி முறைகேடாக ஒரு பத்திரமாவது பதிவு செய்ததாக ஆதாரத்துடன் தெரிவிக்க முடியுமா.