நகராட்சி நிர்வாகத் துறையில் பணி நியமனத்தில் ரூ.1,000 கோடி லஞ்சப் புகார் குறித்து அமைச்சர் கே.என். நேரு மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் அதிமுக எம்.பி. இன்பதுரை, அமலாக்கத் துறை தரப்பில் கேவியட் மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டுள்ளன.
தமிழக நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் முறைகேடாக டெண்டர் வழங்கப்பட்டுள்ளதாகவும் உதவி பொறி யாளர், இளநிலை பொறியாளர், நகரமைப்பு அலுவலர் உள்ளிட்ட 2,538 பணியிடங்களுக்குத் தலா ரூ.25 லட்சம் முதல் ரூ. 35 லட்சம் வரை லஞ்சம் வசூலிக் கப்பட்டு பணிநியமனம் நடந்துள்ளதாகவும் தமிழக டிஜிபிக்கு அமலாக்கத் துறை கடந்த ஆண்டு அக். 27-ல் கடிதம் அனுப்பியது.
அதில், துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர்களான ரவிச்சந்திரன், மணிவண்ணனுக்குச் சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின்போது கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்து 3 முறை தமிழக டிஜிபிக்கு கடிதம் அனுப்பியது.
இந்தக் கடிதத்தின் அடிப்படையில் அமைச்சர் நேரு, அவரது சகோதரர்கள் ரவிச்சந்திரன், மணிவன்ணன் உள்ளிட்டோர் மீது ஊழல் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த ஆதிநாராயணன் மற்றும் அதிமுக எம்.பி. இன்பதுரை ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அமலாக்கத் துறை தந்த ஆதாரங்களின் அடிப்படையில் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சட்ட நடவடிக்கை எடுக்க பிப்.20-ம் தேதி உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்தனர். இதை விசாரிக்கும்போது தங்களது தரப்பு கருத்தையும் கேட்ட வேண்டும் எனக் கோரி, அதிமுக எம்.பி. இன்பதுரை சார்பில் வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன், அமலாக்கத் துறை வழக்கறிஞர் அரவிந்த் குமார் சர்மா ஆகியோர் கேவியட் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.




