அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி சொத்துகளை குவித்தேன்’ – அமைச்சரின் முன்னாள் உதவியாளர் வாக்குமூலம்

‘அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி சொத்துகளைக் குவித்தேன்’ என மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சரின் முன்னாள் உதவியாளர் வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

மதுரையில் மோசடி வழக்கில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் முன்னாள் உதவியாளர் ஜெய்பாலாஜி, அவரது மனைவி கலாவதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான பல்வேறு புகார்களை விசாரிக்க இருவரையும் 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்தனர்.

அப்போது ஜெய்பாலாஜி போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: ரியல் எஸ்டேட் தொழிலில் ஆர்வம் இருந்ததால் 2013-ல் மருதம் லேண்ட் புரொமோட்டர் தொடங்கி தொழில் புரிகிறேன். அதைத்தொடர்ந்து சரவணக்குமார், கணேசன், நமச்சிவாயம் ஆகியோருடன் சேர்ந்து மதுரை சின்ன சொக்கிகுளம் பகுதியில் மதுரம் ப்ராபர்ட்டீஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தை தொடங்கினேன்.

பல்வேறு ஊர்களில் கிளைகளைத் தொடங்கினோம். 5 மற்றும் 7 ஆண்டுகள் என்ற அடிப்படையில் தவணை முறையில் பொதுமக்களிடம் முதலீடுகளைப் பெற்று முதிர்வுக் காலத்தில் இடம் கிரயம் செய்து கொடுப்பதாக விளம்பரம் செய்தோம். ரியல் எஸ்டேட் உச்சத்தில் இருந்த நிலையில், முதலீட்டாளர்களுக்கு இடத்தைப் பதிவு செய்து தர மனமின்றி நாங்களே வைத்துக்கொள்ள முடிவெடுத்தோம்.