“ஆட்சியில் பங்கு என்பது குறித்து கட்சியின் தலைமையிடம் ஏற்கெனவே பேசிவிட்டேன்” என காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
சென்னை செல்வதற்காக விருதுநகர் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் இன்று மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ”டிஎன்டி (பிரமலைக்கள்ளர் சமூகம் ) கணக்கெடுப்பு குறித்து பிரதமர் மோடியிடம் கடிதம் அளிக்க உள்ளேன். சுதந்திரப் போராட்ட களத்தில் போராடி பல்வேறு உரிமைகளை இழந்த இச்சமூக மக்களுக்காக சலுகை வழங்கக் கோரி மனு அளிப்பேன்.
காங்கிரஸ் இன்றி திமுக அரசு அமைக்க முடியாது என தவெக நிர்வாகி நிர்மல்குமார் கூறியிருப்பது அவரது கருத்து.
ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கை குறித்து தலைமைக்கு தெரியும். ஏற்கெனவே கடந்த 17-ம் தேதி கட்சியின் தலைமையிடம் பேசிவிட்டுதான் வந்தேன். செல்வப்பெருந்தகைக்கும், எனக்குமான பிரச்சினை என்பது அண்ணனுக்கும் தம்பிக்குமானது. இதில் பெரியதாக ஒன்றுமில்லை. அவர் என் மீது புகார் அளிக்க டெல்லிக்குப் போவதாக வெளியாகும் தகவலில் ஒன்றுமில்லை. நீங்கள் (பத்திரிகையாளர்கள்) பெரிதாக்க வேண்டாம்.
ஆட்சியில் பங்கு என்பதில் ராகுல் காந்தி கருத்து என்ன என்பதை நீங்கள்தான் அவரிடம் கேட்க வேண்டும். மாணிக்கம் தாகூர் ராஜினாமா போன்ற வதந்திகளை அல்லர, சில்லர ஐடி விங் செய்கின்றன.
கரூர் நாடாளுமன்ற உறுப்பினரை தவறாக பார்க்கும் சங்கிகளின் பார்வை தொடர்கிறது. மாநிலத் தலைவராக இருக்கும் நயினார் நாகேந்திரன் எப்படி பெண்களை பற்றி அவதூறாக பேசி, அதற்காக வருத்தப்பட்டிருக்கிறார். மாவட்டத் தலைவர்களுக்கும் அந்த வியாதி ஒட்டியுள்ளது. அவர்களின் வியாதியை தீர்க்க வேண்டியது முக்கிய கடமை. காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.



