இந்தியாவின் மீது சிறிலங்கா அரசுக்கு பயம் வரவேண்டுமாயின் சுட வேண்டும்

இந்திய கடற்பகுதியில் எல்லைத் தாண்டி வரும் சிறிலங்கா கடற்படையினரையும், கடற்கொள்ளையர்களையும் இந்திய அரசு பாரபட்சமின்றி சுட்டு வீழ்த்தினால் தான் இந்தியாவின் மீது இலங்கை அரசுக்கு பயம் வரும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.”எல்லைத் தாண்டி மீன் பிடிக்கச் சென்றதாக கூறி, பாம்பன் மீனவர்கள் 22 பேர் சிறிலங்கா கடற்படையினரால் சனிக்கிழமை (18)  கைது செய்யப்பட்டு தற்போது அவர்கள் விடுவிக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும், அவர்களுடைய படகுகள், மீன்பிடி வலைகள், திசைகாட்டும் கருவிகள் உள்ளிட்ட உடைமைகள் பறிக்கப்படுவதும் வாடிக்கையாக உள்ளது.

சிறிலங்கா கடற்படையினர் மட்டுமல்லாது கடற்கொள்ளையர்கள் என்ற பெயரில் அந்த நாட்டு குண்டர்களாலும் தமிழக மீனவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றார்கள். கடந்த நாற்பது வருடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். தமிழக மீனவர்களின் பலநூறு கோடி ரூபாய் மதிப்பிலான படகுகள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டும், அழிக்கப்பட்டும் இருக்கின்றன.

கொரோனா கொடுந்தொற்று காலத்தில் அதிகம் பாதிப்புக்கு உள்ளான சமூகங்களில் மீனவர் சமூகமும் ஒன்று. இயற்கை பேரிடரின் போதும், மீன்பிடி தடைக் காலங்களின் போதும் அவர்களால் கடலுக்குள் செல்ல முடியாது. பல்வேறு சூழல்களை கடந்து மீன்பிடிப்பதற்காக கடலுக்கு செல்லும் போது, இலங்கை கடற்படையினரின் அட்டூழியத்தால் தமிழக மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரங்களை முற்றிலும் இழந்து தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். இலங்கை அரசு கடும் பொருளாதார நெருக்கடியில் மூழ்கிய போது தமிழக அரசு பலகோடி ரூபாய் மதிப்பிலான உணவு, மருந்து பொருட்களை அனுப்பி உதவியது.

அங்குள்ள தமிழர்கள் மட்டுமல்லாது சிங்களவர்களுக்கும் மனிதாபிமான அடிப்படையில் அண்ணன் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு உதவியிருக்கிறது. இந்திய அரசு இதுவரை 32,000 கோடி ரூபாய் இலங்கைக்கு கடனுதவி வழங்கியிருக்கிறது. மேலும் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு உதவி செய்வதற்கும், உலக வங்கி கடன் வழங்குவதற்கும் இந்தியா சான்றிதழ் வழங்கியிருக்கிறது.

ஆனால், சிறிலங்கா கடற்படை எந்தவித மனிதாபிமானமும் இன்றி தொடர்ந்து தமிழக மீனவர்களை கொன்று குவித்தும், கைது செய்தும், அச்சுறுத்தியும் வருவது வாடிக்கையாகி விட்டது. ஒன்றிய அரசு இதுவரை இப்பிரச்சினையில் தலையிட்டு நிரந்தர தீர்வு காண்பதற்கு முயற்சிக்கவில்லை.
தமிழக மீனவர்களின் நலன்களை பாதுகாப்பது ஒன்றிய அரசின் கடமை.பேச்சு வார்த்தை பலனளிக்கவில்லை என்றால், இந்திய கடற்பகுதியில் எல்லைத் தாண்டி வரும் இலங்கை கடற்படையினரையும், கடற்கொள்ளையர்களையும் இந்திய அரசு பாரபட்சமின்றி சுட்டு வீழ்த்த வேண்டும். அப்போது தான் இந்தியாவின் மீது இலங்கை அரசுக்கு பயம் வரும்.

தமிழக மீனவர்கள் தாக்குதலுக்கும், கைது நடவடிக்கைகளுக்கும் உள்ளாவது இதுவே கடைசி முறையாக இருக்க வேண்டும். தமிழர்களின் மீன்பிடி உரிமையை நிலைநாட்டவும், கட்சத்தீவை மீட்கவும் ஒன்றிய அரசு இப்பிரச்சினையில் தலையிட்டு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.” என்றார்.