முண்டாசு கவி பாரதியாரின் 144-வது பிறந்தநாள் விழா இன்று எட்டயபுரத்தில் நடந்தது.
தனது பாட்டுக்கள் மூலம் சுதந்திர தாகத்தை ஏற்படுத்திய முண்டாசு கவி பாரதியாரின் 144-வது பிறந்தநாள் விழா இன்று அவர் பிறந்த மண்ணான எட்டயபுரத்தில் நடந்தது.
தமிழக அரசு சார்பில் பாரதியார் மணிமண்டபத்தில் நடந்த விழாவில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் தலைமையில் சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி.மார்க்கண்டேயன், பேரூராட்சி மன்ற தலைவி ராமலட்சுமி சங்கரநாராயணன் உள்ளிட்டோர் பாரதியாரின் முழு உருவ வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விழாவில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், சார் ஆட்சியர் ஹூமான்சூ மங்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதே போல், பாரதி முற்போக்கு வாலிபர் சங்க தலைவர் வெங்கடேசராஜா, செயலாளர் பாலமுருகன், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநிலச் செயலாளர் அறம், ஏஐடியுசி மாநிலத் தலைவர் காசி விஸ்வநாதன், தமாகா வடக்கு மாவட்ட தலைவர் என்.பி.ராஜகோபால், உலக திருக்குறள் கூட்டமைப்பு துறை இயக்குநர் எஸ்.ஜனார்த்தனன், மாவட்ட பொருளாளர் ஜெயா, உமறு புலவர் சங்கத் தலைவர் காஜா மைதீன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க மாவட்ட துணை தலைவர் ராமசுப்பு, தமிழ்நாடு சம்ஸ்கார் பாரதி அமைப்பின் கன்னியாகுமரி கோட்டப் பொறுப்பாளர் காந்திராஜ், தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் செந்தில், பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் மருத்துவர் கலையரசி, திருவையாறு பாரதி சங்கத் தலைவர் தி.ச.சந்திரசேகர் மற்றும் பாரதி அன்பர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பாரதியாரின் முழு உருவ வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கம்பம் பாரதி தமிழ் இலக்கிய பேரவை சார்பில் பாரதி வேடமணிந்த மாணவியை பல்லக்கில் வைத்து, பாரதியார் பிறந்த இல்லத்தில் இருந்து ஊர்வலமாக மணிமண்டபம் வரை கொண்டு வந்தனர்.
அப்போது அவர்கள் பாரதியின் வரிகளை கோஷமிட்டபடி வந்தனர். எட்டயபுரம் தமிழ் பாப்திஸ்து பள்ளி, வீரபாகு வித்யாலயா, பாரதியார் நூற்றாண்டு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, சிந்தலக்கரை எஸ்.ஆர்.எம்.எஸ். பள்ளி உள்ளிட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பாரதியார் வேடம் அணிந்து ஊர்வலமாக வந்து மணி மண்டபத்தில் உள்ள பாரதியார் சிலைக்கு மரியாதை செலுத்தினர். மேலும், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மகாகவி பாரதியாருக்கு புகழ் வணக்கம் செலுத்தினர்.
பாரதியார் பிறந்த இல்லத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அங்கு மக்கள் கூட்டமாக செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனாலும் அங்குள்ள மகாகவி பாரதியின் மார்பளவு சிலைக்கு ஏராளமானோர் மரியாதை செலுத்தினர்.





