கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிப்பு!

பிரபல கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கவிஞர் வைரமுத்து இதுவரை 7 முறை சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது வென்றுள்ளார். அதுபோல, ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ நாவலுக்கான 2003-ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார். இவருக்கு 2014-ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இந்த நிலையில், அவருக்கு இப்போது ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஞானபீட விருது அறிவிப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்த கவிஞர் வைரமுத்து, “இந்திய இலக்கியத்தின் நோபல் பரிசு என அழைக்கப்படும் ஞானபீட விருது பெறுவதில் மகிழ்ச்சி. தமிழ்க் கவிதைக்கு ஞானபீட விருது கிடைக்கவில்லை என்ற குறை என்னால் கழிந்தது. இனி புதிய பாய்ச்சலுடன் என் இலக்கிய பணி தொடரும்” எனத் தெரிவித்தார்.

பாரதிய ஞானபீட ஆய்வு மற்றும் வரலாற்று அமைப்பு கடந்த 1944-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பு சார்பில் ஞானபீட விருது வழங்கப்பட்டு வருகிறது. இது இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருதாக கருதப்படுகிறது.

கடந்த 1965-ம் ஆண்டில் கேரளாவை சேர்ந்த சங்கர குருப் என்பவருக்கு முதல் ஞான பீட விருது வழங்கப்பட்டது. இந்த ஆண்டு 60-வது ஞானபீட விருது வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, 1975-ஆம் ஆண்டு ‘சித்திரப்பாவை’ நாவலுக்காக அகிலன் மற்றும் 2002-ல் தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆகியோர் ஞானபீட விருது பெற்றுள்ளனர்.

தலைவர்கள் வாழ்த்து:

முதல்வர் ஸ்டாலின்: “தமிழைத் தன் கவித்திறத்தால் ஆளும் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது. காலையில்தான் வைரமுத்துவை சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். சற்றுநேரத்தில் இந்த இனிய செய்தி வந்தடைந்து, அந்தச் சந்திப்பின் இனிமையை இன்னும் கூட்டியிருக்கிறது. தமிழில் இதுவரையில் அகிலனும், ஜெயகாந்தனும் மட்டுமே பெற்றிருந்த இவ்விருது, மரபுக் கவிதைகளிலும் நவீனத்திலும் விளையாடி, தமிழ் இலக்கிய உலகில் புதுமைகள் படைத்து ஆளும் வைரமுத்துவின் கைசேர்ந்து அவரையும் நம்மையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கிறது. தலைவர் கருணாநிதி இருந்திருந்தால் வைரமுத்துவை உச்சிமுகர்ந்து பாராட்டியிருப்பார். அவரிடத்தில் நான் நின்று வைரமுத்துவை வாழ்த்துகிறேன், அவரை தமிழ்நாடே வாழ்த்துகிறது.”

கமல்ஹாசன் எம்.பி (மநீம): “நெடிய பரம்பரை கொண்ட தமிழிலக்கியத்துக்கு மூன்றாவது முறையாக உயரிய இலக்கிய விருதான ஞானபீடம் கிடைத்திருக்கிறது. ஜெயகாந்தன் பெற்ற முந்தைய ஞானபீடத்துக்குப் பிறகு, கால் நூற்றாண்டு கடந்து தமிழுக்கு இந்தப் பெரும்பெருமையைச் சேர்த்திருக்கிறார் என் ஆப்தர் வைரமுத்து. ‘வானம் எனக்கொரு போதி மரம்… நாளும் எனக்கது சேதி தரும்’ என்கிற கவிச் சொற்களோடு என் செவியில் விழுந்து இதயம் நுழைந்து நட்பில் கலந்த நண்பரை வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறேன்.”

டிடிவி தினகரன்(அமமுக): “இந்திய இலக்கியத்தின் உயரிய விருதான ஞானபீடம் விருதுக்குத் தேர்வாகியிருக்கும் வைரமுத்துவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஞானபீடம் விருதின் மூலம் உலக இலக்கிய அரங்கில் தாய்மொழி தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் மிகப்பெரிய பெருமையைத் தேடித் தந்திருக்கும் வைரமுத்துவின் தமிழ்ப்பணி மேன்மேலும் தொடர மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்.”