மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திராவிட இயக்கத்தை பாதுகாக்க, தமிழ்நாட்டில் இந்துத்துவ சக்திகள் ஊடுருவ அனுமதிக்க கூடாது என்பதற்காகத்தான் திமுகவுடன், மதிமுக கூட்டணி அமைத்தது. கூட்டணியில் உறுதியாக இருக்கிறோம். திராவிட மாடல் ஆட்சியை நடத்துகின்ற முதல்வர் ஸ்டாலின், மீண்டும் முதல்வராகி ஆட்சி அமைப்பார் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது.
கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சிகளும் ஒவ்வொரு கருத்தை சொல்லிக் கொண்டு இருக்கின்றனர். ஆட்சியில் பங்கு வேண்டும், அதிக இடங்கள் வேண்டும் என்று கேட்பது அவரவர் உரிமை. ஆனால் மதிமுக கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் அவ்விதமான எவ்வித நிபந்தனையும் விதிக்கவோ, அதுபோன்று ஒரு சொல் கூட சொல்லியது கிடையாது.
வரும் தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சியை தொடரும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் அவரிடம், காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு கேட்பது குறித்து கேட்டபோது, “தனிப்பெரும்பான்மை பெற்று திமுக ஆட்சி அமைக்கும்போது இந்த கோரிக்கைகள் எல்லாம் எடுபடாது, ஏற்கப்படாது” என வைகோ பதிலளித்தார்.



