காய்ச்சல், சளி, ஜீரண மண்டல பாதிப்பு, கிருமித் தொற்று உள்ளிட்ட பிரச்சினைகளுக்கான 215 மருந்துகள் தரமற்றவையாகவும், 3 மருந்துகள் போலியானவையாகவும் இருந்தது மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து மாத்திரை, மருந்துகளும் மத்திய – மாநில மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
அந்த ஆய்வின்போது தரமற்ற மற்றும் போலி மருந்துகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட உற்பத்தி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன்படி, கடந்த மாதத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
அதில், காய்ச்சல், சளி, கிருமித் தொற்று, ஜீரண மண்டல பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு பயன்படுத்தப்படும் 215 மருந்துகள் தரமற்றவையாகவும், 3 மருந்துகள் போலியானவையாகவும் இருந்தது கண்டறியப்பட்டது.
அந்த மருந்துகளின் விவரங்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் https://cdsco.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது.




