தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வரும் நிலையில், கிட்னி திருட்டு புகார் தொடர்பாக சட்டப்சபையில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தது. அத்துடன், ‘கிட்னிகள் ஜாக்கிரதை’ என அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பேட்ஜ் அணிந்து சட்டசபையில் பங்கேற்றனர். இந்த நிலையில்,
அதிமுக கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானம் மீது பதிலளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது; ”கிட்னி விற்பனை இப்போது மட்டுமின்றி முந்தைய காலங்களிலும் நடந்துள்ளது. நாமக்கல்லில் கிட்னி திருட்டு புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இடைத்தரகர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டனர்.
புகாருக்குள்ளான இரண்டு மருத்துவமனைகளில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. கிட்னி திருட்டு புகார் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி வினித் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தப்படுகிறது. தவறான சான்றிதழ்களை வழங்கியதும், சட்ட நுணுக்கங்களை தவறாக பயன்படுத்தியதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. புகாருக்குள்ளான மருத்துவமனைகளின் உரிமங்கள் பாகுபாடின்றி ரத்து செய்யப்பட்டுள்ளது.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு வழங்கிய சான்றிதழும் ரத்து செய்யப்பட்டுள்ளது. உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும். அத்துடன், உடல் உறுப்புகளை விற்பனை செய்வது தவறானது என விழிப்புணர்வு ஏற்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.” இவ்வாறு அவர் பேசினார்.