விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும் உள்ளிட்ட 13 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பிப். 7 முதல் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை விவசாயிகள் யாத்திரை நடைபெற உள்ளதாக ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் கூறினார்.
சங்கத்தின் மண்டல நிர்வாகிகள் ஆலோனைக் கூட்டம் சேலத்தில் நேற்று நடந்தது.அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு பொருளாளர் தங்கராஜ் தலைமை வகித்தார்.
மண்டலத் தலைவர் ஆத்தூர் பெருமாள் வரவேற்றார். தமிழக ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன், இணை ஒருங்கிணைப்பாளர்கள் ராமகவுண்டர், பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர், பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்தல் உள்ளிட்ட 13 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 30 விவசாயிகள் பங்கேற்கும் யாத்திரை பிப். 7-ல் தொடங்கவுள்ளது.
இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். யாத்திரையின்போது பல்வேறு மாநிலங்களின் முதல்வர்களை சந்தித்து, கோரிக்கைகளை வலியுறுத்துவோம்.
தமிழகத்தில் விவசாயிகள் மீது பொய் வழக்கு பதிவது, கைது செய்வது போன்ற நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. விவசாயிகள் ஒப்புதல் இல்லாமல், சிப்காட் என்ற பெயரில் நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக சட்டத்தை உருவாக்கி, தொழில்புரட்சி என்ற பெயரில் நீர்நிலைகளையும் சேர்த்து விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன.
கார்ப்பரேட் எண்ணம் கொண்டவர்கள் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளதால், முதல்வருக்கே தெரியாமல் விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறு பிஆர்.பாண்டியன் தெரிவித்தார்.




