கொங்கு மண்டலத்தில் திமுக-வை பலப்படுத்த முன்னாள் அமைச்சரும் மண்டல பொறுப்பாளருமான செந்தில்பாலாஜி ‘சீரிய முயற்சி’களை எடுத்து வரும் நிலையில், கோவை திமுக நிர்வாகிகள் சுமார் 70 பேர் தங்களது பொறுப்புகளை ராஜினாமா செய்திருப்பதாக வெளியாகி இருக்கும் செய்தி திமுக வட்டாரத்தை திகிலடைய வைத்திருக்கிறது.
கோவை வடக்கு மாவட்ட திமுக-வில், வார்டு செயலாளர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் சுமார் 70 பேர் தங்களது பொறுப்புகளை ராஜினாமா செய்வதாக மாவட்டச் செயலாளருக்கும், தலைமைக்கும் கடிதம் அனுப்பி இருக்கிறார்கள். செந்தில்பாலாஜி வந்த பிறகு, கோவையில் மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் கிளம்பிய நிலையில், ஒரே நேரத்தில் 70-க்கும் மேற்பட்டவர்கள் பதவிகளை ராஜினாமா செய்திருப்பது பரபரப்பான விஷயமாகி இருக்கிறது.
கோவை வடக்கு மாவட்ட திமுக-வில் வரும் விளாங்குறிச்சி பகுதிக் கழகத்துக்கு உட்பட்ட 9-வது வார்டின் செயலாளராக இருப்பவர் மயில்சாமி. தங்களது பதவிகளை ராஜினாமா செய்திருக்கும் சுமார் 70 நிர்வாகிகளும் இவரது லெட்டர் பேடில் தான் கையெழுத்திட்டு அனுப்பி உள்ளனர். அந்தக் கடிதத்தில், ‘எங்களது தனிப்பட்ட காரணங்களால் வட்டச் செயலாளர் மயில்சாமி, துணைச் செயலாளர் ஒருவர், வட்டப் பிரதிநிதிகள் 4 பேர், பகுதிக்கழக நிர்வாகிகள் 3 பேர், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ஒருவர், பிஎல்ஏ-2 நிர்வாகிகள் 8 பேர், பிடிஏ நிர்வாகிகள் 9 பேர் மற்றும் பிஎல்சி நிர்வாகிகள் என 70-க்கும் மேற்பட்டோர் பொறுப்புகளை ராஜினாமா செய்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.
இதுகுறித்து மயில்சாமி தரப்பினர் கூறும்போது, ‘‘மயில்சாமி 2010 முதல் வார்டுச் செயலாளராக இருக்கிறார். கட்சி அறிவித்த அனைத்துப் போராட்டங்களிலும் பங்கேற்று கட்சியை வளர்த்து உள்ளோம். ஆனால், சமீப காலமாக அதிமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களுக்கே இங்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கிளைக்கழக அளவிலும் இதுதொடர்கிறது. ஒரு காலத்தில், மாற்றுக் கட்சியில் இருந்த அவர்களை எதிர்த்து அரசியல் செய்தவர்கள் நாங்கள். இப்போது அவர்களுக்குக் கீழ் நாங்கள் எவ்வாறு பணியாற்ற முடியும்? அதனால் தான் பொறுப்புகளை ராஜினாமா செய்துவிட்டோம்” என்றனர்.
விளாங்குறிச்சி பகுதிக் கழக திமுக நிர்வாகிகளோ, ‘‘தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தப்படுவதற்காக வார்டுகளை 2 ஆக பிரித்து பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதையறிந்த மயில்சாமி, தன்னை பதவியில் இருந்து நீக்கிவிடுவார்களோ எனப் பயந்து ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார். மேலும், வயோதிகம் காரணமாக அவர் தேர்தல் பணிகளை பார்க்க முடியாமல் சிரமப்படுகிறார். அதேசமயம், அவரனுப்பிய ராஜினாமா கடிதத்தில் கையெழுத்துப் போட்டவர்கள் என்ன கார
ணம் என்று தெரியாமலேயே மயில்சாமி சொன்னதால் கையெழுத்துப் போட்டிருக்கிறார்கள். இப்போது விஷயம் தெரிந்து அவர்களில் பெரும்பாலானவர்கள் கட்சிப் பணிக்கு திரும்பிவிட்டார்கள். மயில்சாமியின் ராஜினாமா கடிதமும் இன்னும் ஏற்கப்படவில்லை’’ என்றனர்.




