சட்ட ரீதியாக எந்த தடையும் இல்லாதபோது, சென்னையில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கு எப்படி தடை விதிக்க முடியும் என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் தேர்தல் நேரத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதால் சட்டம் – ஒழுங்கை பாதுகாப்பதில் போலீஸாருக்கு சிக்கல் ஏற்படும்.
கிரிக்கெட் ரசிகர்கள் என்ற பெயரில் கூடும் கூட்டத்தினர் அரசியல் கட்சியினருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யக்கூடும் என்பதால் அதற்கு தடை விதிக்கக் கோரியும், குறிப்பாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்கும் கிரிக்கெட் போட்டிகளை தேர்தலுக்குப் பிறகு தள்ளி வைக்கக் கோரியும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி வாக்காளரான பிரபாகரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி மனுதாரர் தரப்பில், தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் முறையீடு செய்யப்பட்டது.
அந்த முறையீட்டை ஏற்க மறுத்த நீதிபதிகள், சட்ட ரீதியாக எந்த தடையும் இல்லாதபோது சென்னையில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கு எப்படி தடை விதிக்க முடியும் என கேள்வி எழுப்பினர்.
வழக்கு எண்ணிடப்பட்டு முறையாக விசாரணைக்கு வரும் போது வழக்கமான நடைமுறையின்படி விசாரிக்கப்படும் என தெரிவித்த நீதிபதிகள், போட்டிகள் நடப்பதால் உங்களுக்கு என்ன பிரச்சினை என்றும், கிரிக்கெட் போட்டிகளை பார்க்க விரும்பவில்லை எனில் வீ்ட்டிலேயே இருங்கள் என்றும் கருத்து தெரிவித்தனர்.





