சமூக நீதி விடுதியில் மாணவிகளுக்கு கெட்டுப்போன உணவு வழங்கப்பட்டதற்கு தமிழக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாஜக மாநில தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கை: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சமூக நீதிக் கல்லூரி மாணவியர் விடுதியில் தரமற்ற, புழுக்கள் நிறைந்த உணவு வழங்கப்பட்டதாக அவ்விடுதி மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது, பெண்கள் மற்றும் மாணவிகளின் நலனை அரசு எவ்வாறெல்லாம் புறக்கணித்து வருகிறது என்பதை உணர்த்துகிறது.
இந்த உணவால் உடல்நலம் பாதிப்படைவதாகக் கூறி, தகுந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும். இது தொடர்பாக உணவு பாதுகாப்புத் துறையினர் உள்ளிட்ட பல்வேறு அரசு அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை நடத்தியும் தொடர்புடைய விடுதி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை இல்லை என்பது கடும் கண்டனத்துக்குரியது.
விடுதி நிர்வாகத்தினர், கேள்வி எழுப்பும் மாணவிகள் குறித்து தவறாக பேசுவதும், அவர்களின் பெற்றோரிடம் மாணவிகள் குறித்து அவதூறு பேசுவதும் தொடர்கிறது என்று மாணவிகள் தெரிவிக்கின்றனர்.
முதல்வர் தனிப்பிரிவுக்கு இது குறித்து புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்காதது பெண்கள் மீதான திமுகவின் அலட்சியப் போக்கை படம் பிடித்துக் காட்டுகிறது.
பெண்களுக்கு ரூ.1,000 கொடுத்து விட்டதாக மார்தட்டிக் கொள்ளும் திமுக அரசு, பெண்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தாததோடு அவர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? இது தான் திராவிட மாடலா? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





