கடந்த முறை விழுப்புரத்தில் போட்டியிட்டு தோற்றுப் போன அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், இம்முறை தனது சொந்த ஊரை உள்ளடக்கிய மயிலம் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டு வருகிறார்.
இதற்காக அவர் கடந்த 3 ஆண்டுகளாக மயிலத்தில் மையம் கொண்டுள்ள நிலையில், அதை மெய்பிக்கும் விதமாக, அவரது அண்ணன் ராதாகிருஷ்ணன், மயிலத்தில் போட்டியிட சண்முகத்துக்காக விருப்ப மனு கொடுத்திருக்கிறார்.
மயிலம் தொகுதி தற்போது பாமக வசம் உள்ளது. அன்புமணியின் விசுவாசியான சிவகுமார் தான் இப்போது அங்கு எம்எல்ஏ. இந்தத் தேர்தலில் அன்புமணி எப்படியும் அதிமுக அணியில் தான் இடம்பிடிப்பார்.
இதனால், சண்முகம் தொகுதி மாறுகிறார் என்று தெரிந்ததுமே சிவகுமாரும் தனக்கான தொகுதியை தயார்படுத்த ஆரம்பித்துவிட்டார். அந்த விதத்தில் இம்முறை அவர் மயிலத்தை விட்டு விக்கிரவாண்டிக்கு இடப்பெயர்ச்சி ஆகிறார்.
கடந்த ஓராண்டாகவே விக்கிரவாண்டியை வட்டமிடும் சிவகுமார், ‘பசுமை தாயகம்’ அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணியின் ‘மகளிர் உரிமை மீட்புப் பயண’ பொதுக் கூட்டத்தை விக்கிரவாண்டி தொகுதியில் விமர்சையாக நடத்தி முடித்துள்ளார்.
அப்போது பேசிய சவுமியா அன்புமணி, ‘‘இடைத்தேர்தல் என்றால் ஆளுங்கட்சியின் ஆதிக்கம் இருக்கும். எதிர்க்கட்சிகள் டெபாசிட் இழந்துவிடும். ஆனால், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக 59 ஆயிரம் வாக்குகளைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்தது’’ என்று விக்கிரவாண்டியில் தங்களின் வெயிட்டை கோடிட்டுக் காட்டினார்.
இந்த நிலையில், விக்கிரவாண்டிக்கு மாறப் போகிறீர்களா என்று சிவகுமாரிடம் கேட்டதற்கு, “விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட சிந்தாமணி கிராமம்தான் எனது பூர்விகம். அதனால் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட தலைமை வாய்ப்பளித்தால் போட்டியிடத் தயாராக இருக்கிறேன்” என்றார்.





