சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட ரயில்வே வளாகத்தில், கடந்த ஓர் ஆண்டில் கைவிடப்பட்ட அல்லது ஆதரவின்றி தவித்த 556 பயணிகள் மீட்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து, சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: கடந்த நிதியாண்டில் (2025-26), சென்னை ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட ரயில் நிலையங்கள், ரயில்வே வளாகத்தில் ஆதரவின்றி தவித்த மற்றும் கைவிடப்பட்ட 227 பெண்கள் உள்பட 556 பயணிகளை ஆர்பிஎஃப் போலீஸார் மீட்டனர்.
இதில் சிறுவர்கள், முதியவர்களும் அடங்குவர். சிறுவர், சிறுமியர்களை குழந்தைகள் நல உதவி மையங்களிலும், பெரியவர்களை தொண்டு நிறுவனங்களிலும் ஒப்படைக்கப்பட்டனர்.
‘ஆப்ரேஷன் சேவா’ கீழ், சென்னை ரயில்வே கோட்டத்தில் பல்வேறு ரயில்களில் பயணத்தின் போது, உடல் நலம் பாதிக்கப்பட்ட 1,125 பயணிகளுக்கு முதலுதவி அளித்து, போதிய மருத்துவ உதவி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர, ‘ஆப்ரேஷன் மாத்ருசக்தி’ கீழ், ரயில்களில் பயணத்தின் போதோ, ரயில் வளாகத்திலோ பிரசவ வலியால் துடித்த 8 கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான மருத்துவ உதவி அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பயணிகள் தவறவிட்ட ரூ.4.36 கோடி மதிப்பிலான சொத்துக்களை மீட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.





