சென்னை தனியார் நிறுவன பெண் ஊழியருக்கு பார்சலில் வந்த மனித மண்டை ஓடு, எலும்புகள்

பாரிமுனையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஒருவருக்கு, அடை யாளம் தெரியாத நபர் கொடுத் தனுப்பிய பார்சலில் மனித மண்டை ஓடு மற்றும் எலும்புகள் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, வியாசர்பாடி, ராஜாஜி தெருவை சேர்ந்தவர் ஸ்ருதி (29), இவர் பாரிமுனை, அரண்மனைக்காரன் தெருவில் உள்ள ஒரு தனியார் டுல்ஸ் விற்பனை நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் மாலை கடைக்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர். அங்கிருந்த பாதுகாப்பு காவலர் கிருஷ்ணாலால் என்பவரிடம், ஸ்ருதி பெயருக்கு ஒரு பார்சல் வந்திருப்பதாகக் கூறி ஒப்படைத்து விட்டுச் சென்றுள்ளார்.

காவலாளி அந்த பார்சலை ஸ்ருதியிடம் கொண்டு சென்ற போது, “நான் எந்தப் பொருளையும் ஆர்டர் செய்யவில்லை, இது என்னுடையது அல்ல” என அவர் கூறியுள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த காவலாளி, அந்தப் பார்சலைத் திறந்து பார்த்தார். அந்த பார்சலில், ஒரு மனித மண்டை ஓடு, மூன்று எலும்புத் துண்டுகள், ஒரு விபூதி பொட்டலம் ஆகியவை இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த எஸ்பிள னேடு போலீஸார், அங்கிருந்த மண்டை ஓடு மற்றும் எலும்பு களைக் கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.

மேலும், கடையைச் சுற்றியுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, பார்சலை கொடுத்துச் சென்ற மர்ம நபரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், பட்டப்பகலில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.