இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்களின் சேவையில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் 6-வது நாளாக விமான சேவை பாதிக்கப்பட்டது. நேற்று மட்டும் வருகை, புறப்பாடு என 96 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் சேவை சீராக இன்னும் சில தினங்கள் ஆகும் என்பதால், சென்னை விமான நிலையத்திலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்வதற்காக முன்பதிவு செய்திருந்த பயணிகள் பெரும்பாலானோர், தங்கள் டிக்கெட்களை ரத்து செய்து, வேறு விமானங்களில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யத் தொடங்கியுள்ளனர்.
பயணிகளின் டிக்கெட்களை ரத்து செய்யும்போது, அந்த பணம் அவர்களுடைய வங்கிக் கணக்குக்கு வந்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வங்கிக் கணக்கில் பணம் வர தாமதம் ஆவதாக பயணிகள் தரப்பில் கூறப்படுகிறது.
கட்டண உச்சவரம்பு: மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம், உள்நாட்டு விமானங்களில் டிக்கெட்டுகளுக்கு, உச்சவரம்பாக ஒரு டிக்கெட்டுக்கு 500 கி.மீ. வரையிலான பயண தூரத்துக்கு அதிகபட்சம் ரூ.7,500, ஆயிரம் கி.மீ. ரூ.12 ஆயிரம், 1500 கி.மீ. பயண தூரத்துக்கு ரூ.15 ஆயிரம், 1500 கி.மீட்டருக்கு மேல் ரூ.18 ஆயிரம் என உச்சவரம்பை நிர்ணயித்துள்ளது.
மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் விதித்துள்ள உத்தரவை தனியார் விமான நிறுவனங்கள் முறையாக அமல்படுத்துவதும் இல்லை. அந்த நிறுவனங்கள் வழக்கம்போல் கூடுதல் கட்டணங்களை பல்வேறு காரணங்களைக் கூறி வசூலிப்பதாக பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.





