தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை தண்டையார்பேட்டையில் கஞ்சா விற்பனையை தட்டிக் கேட்ட 23 வயது இளைஞர் விஷ்ணு என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
போதைப் பொருள் புழக்கத்தை தட்டிக் கேட்டால் கொலை தான் இந்த ஆட்சியில் பதிலா? இதுதான் மாற்றமா? இந்த லட்சணத்தில், திருச்சியில் பேசிய முதல்வர், தன் மீது வீண் பழி போடுவதாக வேறு ஆதங்கப்படுகிறார்.
காவல்துறையை கையில் வைத்திருப்பவர், சட்டம் ஒழுங்கிற்கு பொறுப்பேற்காமல் நழுவ முயல்வது வெட்கக்கேடு. இதில், போதைப்பொருளை தன்னால் ஒழிக்க முடியாது என்று மறைமுகமாக ஒப்புதல் வாக்குமூலம் வேறு அளித்துள்ளார்.
மேலும், சிங்கப்பெண் அதிரடிப் படையை அடுத்த வாரம் தொடங்கி வைப்பாராம். கடந்த வாரம் அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருந்த நிலையில், எதற்கு நீங்கள் கடைசி நிமிடத்தில் ரத்து செய்தீர்கள்? உங்கள் உதவியாளர் வீட்டு விழாவை சிறப்பிக்க தமிழகப் பெண்களின் பாதுகாப்பை சமரசம் செய்தீர்களா? “ஆட்சி நடத்துவது எப்படி” என நீங்கள் 6 மாத க்ராஷ் கோர்ஸ் முடிப்பதற்குள் மக்கள் மடிந்து கொண்டே இருக்க வேண்டுமா? அதை யாரும் கேள்வி கேட்கக் கூடாதா? தூத்துக்குடி அருகே கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆளுங்கட்சி தவெக நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டு உள்ளதாக செய்திகள் வருகின்றன.
ஒரு கட்சித் தலைவராக, தன் கட்சியினரை அடக்கி வைக்க வக்கில்லாதவர், எப்படி காவல்துறையை நிர்வகிப்பார்? பஞ்ச் டயலாக் பேசும் ரீல்ஹீரோவாகவே தன்னை பாவித்துக்கொள்ளும் பொய்க்கால் குதிரை அரசின் முதல்வர், அந்த மாய உலகில் இருந்து வெளியேவந்து, தான் வகிக்கும் பொறுப்பின் தலையாயப் பணியான சட்டம் ஒழுங்கை காக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மனம் தளர வேண்டாம்
பழனிசாமி வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், கட்சியின் தற்போதைய நிலையை எண்ணி, தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளர், மகேந்திரன் தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டது வேதனையாக இருக்கிறது. அதிமுகவுக்கு தற்போது ஏற்பட்டுள்ள சோதனையைக் கண்டு நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் மனம் தளர வேண்டாம்; விபரீதமான செயல்களில் ஈடுபட வேண்டாம்.
வெற்றி, தோல்வி என்பது மாறி, மாறிவரும். தோல்வியைக் கண்டு நாம் துவண்டு விடுவதில்லை. கட்சி தற்போது வெற்றி வாய்ப்பை இழந்தாலும், இதிலிருந்து விரைவிலேயே மீண்டு, எதிர்வரும் தேர்தலில் மகத்தான வெற்றியை பெறும்.
தற்போதைய சூழ்நிலையில் இருந்து கட்சி மீண்டெழுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறேன். இதற்கு நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கூறியுள்ளார்.




