திமுக அரசின் சாதனைகளையும், அதனால் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் கிடைத்துள்ள பயன்களையும் இடைவிடாது பிரச்சாரம் செய்யும் பணியை ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும் என்று திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மறுநாளே மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்தி, தேர்தல் பணிகளை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்பதை உங்களில் ஒருவனான நான், உங்களின் குரலாக எடுத்துச் சொன்னேன். வெற்றி நிச்சயம்.
அதற்கான இலக்கை அடைய சமரசமின்றி உழைப்பது ஒன்றே லட்சியம். அந்த உறுதியுடன்தான் திமுக தனது தோழமைக் கட்சிகள் அடங்கிய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியுடன் 2026 சட்டப்பேரவை தேர்தல் களத்தை சந்திக்கிறது.
சொன்னதைச் செய்யும் திமுக அரசு, சொல்லாத திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளது. 2026 சட்டப்பேரவை தேர்தல் களத்துக்கான திமுகவின் தேர்தல் அறிக்கை வெகு விரைவில் வெளியாக உள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் நாட்டில் எந்த மாநிலமும் செய்ய முடியாத சாதனை திட்டங்களையும், பல மாநிலங்கள் பின்பற்றக்கூடிய முதன்மையான திட்டங்களையும் திமுக அரசு நிறைவேற்றியுள்ளது.
இந்த சாதனைகளையும், அதனால் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் கிடைத்துள்ள பயன்களையும், அவர்களது வாழ்வில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும் இடைவிடாது பிரச்சாரம் செய்யும் பணியை ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும்.





