‘திமுக ஆட்சியில் பட்டியலின மக்கள் உட்பட யாருக்கும் பாதுகாப்பு இல்லை’ – பாஜக

சர்வாதிகாரியாக மாறுவேன்’, ‘தலைகுனிய விட மாட்டேன்’ என வெற்றுக் கூச்சலிடுவதை நிறுத்தி விட்டு முதல்வர் ஸ்டாலின் செயலில் வீரத்தை காட்ட வேண்டும் என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எழுதிக் கொடுக்கும் வசனங்களை பேசுவதில், அரசியல் நாவணிகம் செய்வதில் வல்லவர் என்பதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பொய்யான தேர்தல் வாக்குறுதிகள் வழங்கி சூழ்ச்சி செய்து தேர்தலில் வெற்றி பெற்று நிரூபித்து விட்டார். ‘தேவைப்பட்டால் சர்வாதிகாரியாக மாறுவேன்’ என சவால் விட்டு அரசியல் நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார்.

இப்போது, ‘தமிழகத்தை தலைகுனிய விட மாட்டேன்’ என வீர வசனம் பேசி வருகிறார். ஆனால், தமிழகத்தில் நாள்தோறும் நடப்பதை பார்க்கும்போது, இவையெல்லாம் வெறும் வாய்ச் சவடால்கள், வெற்றுக் கூச்சல்கள் என்பதை மக்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள். முதல்வராக இருக்கும் மு.க.ஸ்டாலின் தான் காவல் துறையையும் கவனித்து வருகிறார். ஆனால், தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பது அவருக்கு தெரியவில்லை அல்லது தெரிந்தும் தெரியாதது போல நடித்துக் கொண்டிருக்கிறாரா? என்பதும் தெரியவில்லை.

இரு நாட்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்டம், இடைக்காட்டூர் கிராமத்திற்குள், இரு சக்கர வாகனங்களில், அரிவாள், பட்டாகத்திகளுடன் வந்த ஒரு கும்பல், கண்ணில் கண்டவர்களை எல்லாம் அரிவாளால் வெட்டி கொடூரமாக தாக்கியுள்ளது. இதற்கு சில நாள்களுக்கு முன்பு, திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்து கிராமத்தில் நுழைந்த கும்பல், அங்குள்ள தேநீர் கடை மீது பெட்ரோல் குண்டு வீசியது. கிராமத்தில் உள்ள அப்பாவி பொதுமக்களை அக்கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த வன்முறை சம்பவங்கள் பற்றிய காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளன. குற்றவாளிகளுக்கு காவல்துறை மீது துளியும் அச்சம் இல்லாததே இதுபோன்ற வன்முறை சம்பங்களுக்கு காரணம். காவல்துறையை சுதந்திரமாக செயல்பட விடாமல் திமுகவினர் தங்கள் ஏவல் துறையாக மாற்றியுள்ளனர். தமிழகத்தில் நகரங்கள் மட்டுமல்லாது குக்கிராமங்கள் வரை கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தாராளமாக கிடைக்கின்றன. இதுவும் வன்முறைக்கு காரணமாக உள்ளன.

ஆனால், போதைப் பொருட்களை ஒழிக்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதுபற்றி பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினால், தமிழகத்தில் போதைப் பொருட்கள் தயாரிக்கப்படுவதில்லை, வெளிமாநிலங்களில் இருந்துதான் வருகிறது என அமைச்சர்களே சப்பைக்கட்டு கட்டுகின்றனர். வெளிமாநிலங்களில் இருந்து போதைப் பொருட்கள் வந்தால் அதை தடுப்பதுதானே காவல்துறையின் பணி. திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்வதிலும், எதிர்க்கட்சிகள் கூட்டம் நடத்தினால், ஆர்ப்பாட்டம் நடத்தினால் அதை ஒடுக்குவதிலும்தான் திமுக அரசின் காவல் துறை சிறப்பாக செயல்படுகிறது. குற்றவாளிகளை ஒடுக்குவதில், சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில், போதைப் பொருட்களை ஒழிப்பதில் காவல்துறையின் செயல்பாடு பூஜ்யமாக உள்ளது.

திமுக ஆட்சியில் நடக்கும் வன்முறைச் சம்பவங்கள் பெரும்பாலும் பட்டியலின மக்களுக்கு எதிராகவே நடக்கிறது. ஆனால், கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் சமூக நீதி பற்றி முதல்வர் ஸ்டாலினும், அமைச்சர்களும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.