‘‘திமுக மீதும், அரசு மீதும் எங்களுக்கு விமர்சனங்கள் உண்டு. அந்த விமர்சனங்களோடு தான் கூட்டணியை போற்றுகிறோம்” என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
இது தொடர்பாக, தூத்துக்குடியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி மாநாட்டில் அவர் பேசியதாவது: தமிழகத்தில் பாஜக-வால் காலூன்ற முடியாத நிலை இருந்தது. பாஜக-வுடன் சேர்ந்தால் அவமானம் என்ற உளவியலை கட்டமைத்து இருந்தோம். அதனை மெல்ல மெல்ல நீர்த்து போகச் செய்யும் நிலை உள்ளது. இப்படிப்பட்ட ஆபத்தான சூழலில் இடதுசாரிகள் ஒருங்கிணைந்து இருக்க வேண்டிய தேவை இருக்கிறது.
இடதுசாரி அரசியல், கம்யூனிஸ்ட் கட்சியுடன் நிற்பது அல்ல. அதில் திராவிட இயக்கங்களையும், அம்பேத்கர் இயக்கங்களையும் இணைத்து
செயல்பட வேண்டும்.
இடதுசாரி சிந்தனைகள் தேசிய அளவில் விரிவுபடுத்தப்பட வேண்டும். பாஜக-வுடன் சேர்ந்துவிட்டது என்பதற்காக அதிமுக-வை புறக்கணித்து விடக்கூடாது. அக்கட்சியையும் இடதுசாரி அரசியலை அடிப்படையாகக் கொண்டு பெரியார் கொள்கையுடன் உருவான இயக்கமாகத்தான் அணுக வேண்டும். அதிமுக நீர்த்துப் போய்விடக்கூடாது, அது வலிமை இழந்துவிடக்கூடாது என நாங்கள் கூறுவதற்கு அதுதான் காரணம். வேறு எந்த நோக்கமும் கிடையாது.
கட்சி தொடங்கிய உடனேயே நான்தான் முதல்வர் என கூறிக்கொண்டு இன்று பலபேர் வந்துள்ளனர். அதுதான் காற்றடிக்கும் திசை என பல பேர் அங்கு தாவுகிறார்கள். அந்த சதி அரசியலை முறியடிக்க வேண்டும். திமுக மீதும், அரசு மீதும் எங்களுக்கு விமர்சனங்கள் உண்டு. அந்த விமர்சனங்களோடு தான் கூட்டணியை போற்றுகிறோம்.
ஆனால், வலதுசாரிகளுக்கு இங்கே சிவப்புக் கம்பளம் விரிக்க முடியாது. வலதுசாரிகளுக்கு துணை போகிற கும்பலை ஆதரிக்க முடியாது. இடைக்கால தேவைக்காக அணி மாறிவிட முடியாது. இடதுசாரிகள் இணைந்தே நிற்போம். வலதுசாரி அரசியலை வீழ்த்தும் வரை ஓய்ந்துவிடக்கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.





