திருச்சி கிழக்கு தொகுதியை விஜய் ‘டிக்’ செய்தது ஏன்?

தவெக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பட்டியல் நேற்று வெளியான நிலையில் பெரம்பூர் தவிர, திருச்சி கிழக்கு தொகுதியிலும் தவெக தலைவர் விஜய் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்.

திருச்சி கிழக்கை அவர் தேர்ந்தெடுக்க பல்வேறு காரணங்கள் இருப்பதாக அக்கட்சியினர் கூறுகிறார்கள். திருச்சி தமிழகத்தின் மத்திய பகுதியாக இருக்கிறது. விமான, ரயில் போக்குவரத்து அதிகம் உள்ள மத்திய பகுதியான இங்கு போட்டியிட்டால் மத்திய மண்டலம் மட்டுமல்லாது தென் மாவட்ட மக்களுடனும் தான் நெருக்கமாக இருக்கிறோம் என்று உணரவைக்க முடியும் என்று விஜய் நம்புகிறாராம். இவைதான் திருச்சி கிழக்கை விஜய் தேர்ந்தெடுக்க முக்கிய காரணமாகும்.

மேலும், கிராமங்களை விட நகரங்களில் தவெகவுக்கு அதிக செல்வாக்கு இருக்கிறது என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. மேலும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் விஜய்க்கு அதிகமான செல்வாக்கு இருப்பதும் புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்திருக்கிறது.

இவை இரண்டும் ஒருங்கே அமையப்பெற்ற தொகுதி என்பதால்தான் திருச்சி கிழக்கு தொகுதியை விஜய் தேர்ந்தெடுத்துள்ளார் என்கிறார்கள். அடுத்ததாக திருச்சிதான் திருப்பத்தை தரும் என்பது அரசியல் கட்சிகளின் அசைக்க முடியாத நம்பிக்கை.

அந்த நம்பிக்கையின்படியே விஜய் முதலில் திருச்சியில் தனது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை தொடங்கினார். தற்போது, தனது முதல் தேர்தல் போட்டியையும் திருச்சியில் இருந்து தொடங்கி இருக்கிறார் என்கிறார்கள்.