தேர்தலில் போட்டியிட மதுரை அதிமுகவினர் ஆர்வம்

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதிமுகவினர் போட்டியிட ஆர்வமாக விருப்ப மனுக்களை, கட்சித் தலைமையிடம் வழங்கி வருகின்றனர்.

மதுரை மாவட்டத்தில் அதிமுக, அமைப்பு ரீதியாக மாநகர், புறநகர் கிழக்கு, மேற்கு என 3 மாவட்டங்களாகச் செயல்படுகின்றன. மாநகர் மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, கிழக்கு மாவட்டச் செயலாளராக விவி.ராஜன் செல்லப்பா எம்எல்ஏ, மேற்கு மாவட்டச் செயலாளராக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஆர்பி.உதயகுமார் உள்ளனர்.

ஜெயலலிதா இருந்தவரை மாவட்டச் செயலாளர்கள் முதல் பகுதி, கிளைச் செயலாளர்கள் மாற்றம் அடிக்கடி நடைபெறும். அதுபோல் உள்ளாட்சித் தேர்தல் தொடங்கி, சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தல்களில் வசதி, பதவி அடிப்படையில் இல்லாமல் அடிமட்டத் தொண்டனுக்கும் ஜெயலலிதா வாய்ப்புகளை வாரி வழங்கினார். அதனால், அதிமுக வேட்பாளர் பட்டியலை யாராலும் எளிதில் கணிக்க முடியாது.

அதற்கு மாறாக அதிமுகவில் தற்போது யார் யார், எந்தெந்தத் தொகுதிகளில் போட்டியிடப் போகிறார்கள் என்பதை பட்டியல் வெளியாகும் முன்பே எளிதாகக் கணிக்க முடிகிறது.

ஆனாலும், சென்னையில் சமீபத்தில் நடந்து அதிமுக பொதுக்குழுவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி, “நான் சாதாரண கிளைச் செயலாளராக இருந்து இந்த இடத்துக்கு வந்தவன், அதிமுகவில் யார் வேண்டுமென்றாலும் நாளைக்கு இந்த நிலைக்கு வரலாம், இந்தப் பொதுக்குழுக் கூட்டத்துக்கு வந்து, கட்சிக்காக உழைக்கும் பலருக்கு வாய்ப்புக் கிடைக்கலாம்” என்று கட்சியினருக்கு நம்பிக்கையைக் கொடுத்து உற்சாகப்படுத்தினார்.

அவரது இந்த நம்பிக்கையான பேச்சால் தற்போது விருப்ப மனு வாங்கத் தொடங்கிய முதல் நாள் மதுரை மாவட்ட கட்சியினர் ஏராளமானோர் ஆர்வமாக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு வழங்கி வருகின்றனர். செல்வாக்கு மிக்கவர்கள் போட்டியிட தயாராகும் தொகுதியிலும் அவர்களை எதிர்த்து நிர்வாகிகள் இந்த முறை ‘சீட்’ கேட்டு விருப்பமனு வழங்கத் தயாராகி வருகின்றனர்.