ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் உயர் பதவிகளை அடைந்தாலும் சீக்கிரமே தங்களது அடையாளத்தைத் தொலைத்து விடுவார்கள் என்று பரவும் ஒரு சென்டிமென்ட் செய்தியால் திருச்சி அரசியல்வாதிகள் திகிலடைந்து கிடக்கிறார்கள்.
ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றிபெறுபவர்கள் அவர்கள் எந்தக் கட்சியாக இருந்தாலும் அவ்வளவாக சோபிக்க மாட்டார்கள். அரசியல் ரீதியாக பல்வேறு பிரச்சினைகளைச் சந்திப்பார்கள் என்று சொல்பவர்கள் அதற்குச் சான்றாக இந்தத் தொகுதியின் 50 ஆண்டு கால தேர்தல் ஃப்ளாஷ் பேக்கை எடுத்துப் போடுகின்றனர்.
ஸ்ரீரங்கத்தில் 1977, 1980, 1984 ஆகிய மூன்று தேர்தல்களில் பெற்றிபெற்ற ஆர்.சவுந்தரராஜன், எம்ஜிஆர் அமைச்சரவையில் அமைச்சராகவும் இருந்தார். ஆனால் அதன் பிறகு, அவர் கஷ்ட ஜீவனம் நடத்தி கடைசி காலத்தைக் கழித்தார். 1989-ல் திமுக கூட்டணியில் ஜனதா கட்சி சார்பில் நின்று வெற்றிபெற்ற வெங்கடேஸ்வர தீட்சிதர், ஆட்சி கலைப்பால் ஒன்றரை ஆண்டிலேயே பதவியிழந்து அரசியலிலும் அஸ்தமித்தார்.
இதேபோல் 1991-ல் இங்கு வெற்றிபெற்று அமைச்சரவையில் இடம்பிடித்த அதிமுக-வின் கு.ப.கிருஷ்ணன் அதன்பிறகு அங்கு தாக்குப்பிடிக்க முடியாமல் தனியாக கட்சி நடத்திவிட்டு தேமுதிக-வில் செட்டிலானார். அங்கேயும் ஜொலிக்க முடியாததால் மீண்டும் அதிமுக-வுக்கே யு டர்ன் அடித்தவர், ஓபிஎஸ் பக்கம் இருந்துவிட்டு அண்மையில் தவெக-வில் இணைந்தார்.
1996-ல் வெற்றிபெற்ற திமுக வேட்பாளர் தி.ப.மாயவன் அதன் பிறகு கோஷ்டி அரசியலில் தாக்குப்பிடிக்க முடியாமல் தீவிர அரசியலில் இருந்தே ஒதுங்கினார். 2001-ல் வெற்றி பெற்று அதிமுக அமைச்சரவையில் அங்கம் வகித்த கே.கே.பாலசுப்பிரமணியம் அதன் பிறகு அரசியலில் நிலைக்க முடியவில்லை.
2006-ல் இங்கு வாகை சூடிய மு.பரஞ்சோதி, 2011-ல் திருச்சி மேற்கு இடைத் தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக அமைச்சரவையில் இடம்பிடித்தார். பிற்பாடு பெண் மருத்துவர் ஒருவரின் வன்கொடுமை புகாரால் அமைச்சர் பதவியை இழந்தார்.
இதேபோல், 2011-ல் ஸ்ரீரங்கத்தில் வென்று முதல்வரான அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தனது பதவிக்காலம் முடியும் முன்பே ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு பதவியைப் பறிகொடுத்தார். 2015 இடைத் தேர்தல், 2016 பொதுத் தேர்தல்களில் போட்டியிட்டு வென்று அதிமுக அமைச்சரவையில் அங்கம் வகித்தவர் வளர்மதி. ஆனால் 2021-ல், அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பே கொடுக்கவில்லை அதிமுக.
2021-ல் திமுக சார்பில் போட்டியிட்டு வென்ற திமுக-வின் பழனியாண்டியும் இப்போது நிம்மதியாக இல்லை. அமைச்சர் நேருவுக்கு எதிராக அணி திரட்டி நிற்கும் இவர், குவாரி விவகாரம் தொடர்பாக அண்மையில் செய்தியாளர்களை தாக்கிய புகாரில் சிக்கி இருக்கிறார். இதனால் இம்முறை அவருக்கு சீட் கிடைப்பதிலேயே சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.





