நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணி நியமனங்களுக்கு லஞ்சம் பெறப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அனுப்பியுள்ள கடிதத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரிக்க டிஜிபிக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவுக்கு தமிழக அரசும், அமலாக்கத் துறையும் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகா மைத்தான்பட்டியைச் சேர்ந்த கே.ஆதிநாராயணன் என்பவர்,உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “தமிழகத்தில் கடந்த 2024-25-ம் ஆண்டில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் உதவிப் பொறியாளர், இளநிலைப் பொறியாளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட 2,538 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
இதில் ஒரு பதவிக்கு ரூ.25 லட்சம் முதல் 35 லட்சம் வரை என மொத்தம் ரூ.634 கோடி லஞ்சமாக பெறப்பட்டுள்ளதாகக் கூறி அதற்கான ஆதாரங்களுடன் தமிழக டிஜிபிக்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியுள்ளது. 232 பக்கங்கள் கொண்ட அந்த கடிதத்தில் லஞ்சம் பெறப்பட்டதற்கான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள், முகாந்திரங்கள் உள்ளன.
இதுபோன்ற ஊழல் வழக்குகளை அமலாக்கத் துறை நேரடியாக வழக்குப் பதிவு செய்து விசாரிக்க முடியாது என்பதால் தாங்கள் திரட்டிய ஆதாரங்களை டிஜிபிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தமிழக அரசின் வெளிப்படைத்தன்மையை நிரூபிக்கும் வகையில் நகராட்சி நிர்வாகத்துறையில் நடைபெற்றுள்ள ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டுமென டிஜிபிக்கு மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, இது தொடர்பாக தலைமைச் செயலரின் அனுமதியுடன் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி எம்.எம்.வஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடந்தது.
அதையடுத்து நீதிபதிகள், வழக்கு தொடர்பாக தமிழக உள்துறைச் செயலாளர், அமலாக்கத்துறை இயக்குநர், டிஜிபி உள்ளிட்டோர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜன.23-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இதேபோல, தமிழகத்தில் மணல் குவாரிகளில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக டிஜிபிக்கு அனுப்பிய ஆதாரங்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க டிஜிபிக்கு உத்தரவிடக் கோரி அமலாக்கத் துறை சார்பிலும் தனியாக வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கு விசாரணையையும் நீதிபதிகள் ஜன.23-க்கு தள்ளி வைத்துள்ளனர்.





