நடிகை ஸ்ரீதேவி வாங்கிய சொத்து தொடர்பான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை

நடிகை ஸ்ரீதேவி வாங்​கிய சொத்து தொடர்​பாக செங்​கல்​பட்டு நீதி​மன்​றத்​தில் நடை​பெற்று வரும் வழக்கு விசா​ரணைக்​கு, இடைக்​காலத் தடை விதித்து சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவி கடந்த 1988-ம் ஆண்​டு, சென்னை கிழக்கு கடற்​கரை சாலை​யில் உள்ள 4.77 ஏக்​கர் நிலத்​தை, சம்​பந்த முதலி​யார் என்​பவரின் குடும்​பத்​தினரிட​மிருந்து விலைக்கு வாங்​கி​யுள்​ளார்.

அந்த சொத்தை பல ஆண்​டு​களாக அனுப​வித்து வந்த நிலை​யில் சம்​பந்த முதலி​யாரின் மகன் சந்​திரசேகரனின் இரண்​டாவது மனை​வி, அவரது மகன் நடராஜன், மகள் சிவ​காமி என 3 பேர் வாரிசு சான்​றிதழ் அடிப்​படை​யில் தங்​களுக்​கும் அந்த சொத்​தில் பங்கு உள்​ளது எனக் கூறி செங்​கல்​பட்டு கூடு​தல் அமர்வு நீதி​மன்​றத்​தில் உரிமை​யியல் வழக்கு தொடர்ந்​துள்​ளனர்.

இந்த வழக்கை நிராகரிக்​கக்​கோரி, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் மற்​றும் அவரது மகள்​களான நடிகைகள் ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகியோர் செங்​கல்​பட்டு நீதி​மன்​றத்​தில் மனுத்​தாக்​கல் செய்​திருந்​தனர்.

இந்த மனுக்​களை விசா​ரித்த செங்​கல்​பட்டு நீதி​மன்​றம், முழு​மை​யான விசா​ரணைக்​குப் பிறகே அந்த சொத்​தின் உரிமை குறித்து முடி​வெடுக்க முடி​யும் எனக்​கூறி, போனி கபூரின் மனுவை தள்​ளு​படி செய்​தது. அதை எதிர்த்​து, போனி கபூர், ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகியோர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​திருந்​தனர்.

அதில், தங்​களது சொத்​துக்கு மறைந்த சம்​பந்த முதலி​யாரின் மகன் சந்​திரசேகரனின் வாரிசுகள் எனக்​கூறிக் கொண்டு 3 பேர் போலி​யான ஆவணங்​களை தாக்​கல் செய்து வழக்கு தொடர்ந்​துள்​ள​தாக​வும், அதை செங்​கல்​பட்டு நீதி​மன்​றம் கவனத்​தில் கொள்​ள​வில்லை எனக் கூறி​யிருந்​தனர்.

இந்த வழக்கை விசா​ரித்த நீதிபதி டி.​வி.தமிழ்​செல்வி இந்த வழக்கை இறுதி விசா​ரணைக்​காக வரும் 26-ம் தேதிக்கு தள்ளி வைத்​தார். அது​வரை செங்​கல்​பட்டு நீதி​மன்​றத்​தில் நடை​பெற்று வரும் வழக்கு விசா​ரணைக்கு இடைக்​காலத் தடை விதித்து உத்​தர​விட்​டார்.