நாமக்கல் மாவட்டத்தில் செப்டம்பர் 19, 20, 21 ஆகிய தேதிகளில் இபிஎஸ் பிரச்சாரம் மேற்கொள்வதாக இருந்தது. அதன்படி 19-ம் தேதி அங்கு அவர் பிரச்சாரத்தைத் தொடங்கிய நிலையில், மற்ற இரண்டு நாள் பயணம் அடுத்த மாதம் 4, 5 தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டது. மழையால் ஒத்திவைக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும் இதன் பின்னணியில் வேறு சில காரணங்களும் இருப்பதாக இப்போது சொல்கிறார்கள்.
இதுகுறித்து நம்மிடம் விரிவாகப் பேசிய நாமக்கல் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் சிலர், “நாமக்கல் மாவட்ட அதிமுக-வில் நாமக்கல் மாநகரச் செயலாளரும் முன்னாள் எம்எல்ஏ-வுமான கே.பி.பி.பாஸ்கர், மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான தங்கமணிக்கு எதிராக தனி ஆவர்த்தனம் செய்து வருவது தலைமை வரைக்கும் தெரிந்த விஷயம் தான்.
இந்த நிலையில், உடல் நலமின்மையால் கட்சி நடவடிக்கைகளில் பங்கெடுக்காமல் இருந்த தங்கமணிக்கு எதிராக, எடப்பாடியார் மீது அவர் அதிருப்தியில் இருப்பதாகவும் கட்சி மாறப் போவதாகவும் செய்திகளைப் பரப்பினார்கள். இதற்கு உடனடியாக மறுப்புத் தெரிவித்த தங்கமணி, தனது உடல் நிலையையும் பொருட்படுத்தாது திருச்சியில் நடைபெற்ற எடப்பாடியாரின் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றார்.
ஆனாலும் அவருக்கு எதிரான வதந்திகளை பரப்பிக் கொண்டே இருக்கிறார்கள். இதனால் எடப்பாடியாரும் எதை நம்புவது எதை நம்பாமல் இருப்பது என்று புரியாமல் குழப்பத்தில் இருக்கிறார்.
இந்தச் சூழலில், நாமக்கல் மாவட்டத்தில் தங்கமணிக்கு எதிராக அவரது அதிருப்தியாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பாஸ்கர் தலைமையில் தனி அணியை உருவாக்கிவிட்டார்கள். பாஸ்கருக்கும் எடப்பாடியாருக்கும் நீண்ட காலமாக நெருக்கம் உண்டு என்பதால் பாஸ்கர் தரப்பு குறித்து தங்கமணி ஆதரவாளர்கள் சொல்லும் புகார்களுக்கு தலைமைக் கழகம் செவிகொடுப்பதில்லை.
இது தங்கமணி தரப்புக்கு சங்கடத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் தான் செப்டம்பர் 19, 20, 21 தேதிகளில் நாமக்கல் மாவட்டத்தில் எடப்பாடியாரின் பிரச்சாரப் பயணத்துக்கு ஏற்பாடானது. அதன்படி 19-ம் தேதி சேந்தமங்கலம், ராசிபுரம் தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார் எடப்பாடியார். அப்போதும் மழை இருந்தது. ஆனாலும் பிரச்சாரத்தை அவர் நிறுத்தவில்லை.
மறுநாள் நாமக்கல் தொகுதியில் அவர் பிரச்சாரம் மேற்கொள்வதாக இருந்தது. இதற்காக பாஸ்கர் நாமக்கல்லில் தடபுடலாக ஏற்பாடுகளைச் செய்து தனது செல்வாக்கை காட்ட நினைத்திருந்தார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டே வந்த தங்கமணி தரப்பு, மழையைக் காரணம் காட்டி எடப்பாடியாரின் நாமக்கல் பிரச்சாரத்தை ஒத்திவைக்க வைத்துவிட்டது. மாவட்டச் செயலாளரை மீறி செயல்பட முடியாது என்பதால் எடப்பாடியாரும் இதற்கு சம்மதித்துவிட்டார்.
அதேசமயம், பாஸ்கரை ஓரங்கட்ட மாநில வர்த்தகர் அணி இணைச் செயலாளரான ஸ்ரீதேவி மோகனை நாமக்கல் தொகுதிக்காக தயார்படுத்துகிறார் தங்கமணி. எடப்பாடியாரை வரவேற்று நாமக்கல்லில் மோகனும் சில இடங்களில் ஃபிளெக்ஸ்களை வைத்திருந்தார். இதில் எடப்பாடியார் பேசுவதற்காக ஏற்பாடான இடத்தில் மோகன் வைத்திருந்த ஃபிளெக்ஸ்களை ஒரு கோஷ்டி கிழித்து துவம்சம் செய்தது. அதன் பிறகு அந்த இடத்தில் பாஸ்கர் தரப்பு ஃபிளெக்ஸ்களை வைத்தது. இது போலீஸ் பஞ்சாயத்து வரைக்கும் சென்ற நிலையில் தான் எடப்பாடியாரின் பயணம் ஒத்திவைக்கப்பட்டது.
எடப்பாடியாரின் பிரச்சாரப் பயணம் ஒத்திவைக்கப்பட்டாலும் அதேநாளில், ஏற்கெனவே செயல்பட்டு வரும் மாநகர அதிமுக அலுவலகத்தை அவசர கதியில் புனரமைத்து அதற்கு திறப்பு விழா நடத்திவிட்டார் பாஸ்கர். இதற்கு மாவட்டச் செயலாளர் தங்கமணி உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் யாருக்கும் அழைப்பு இல்லை. அதேசமயம், தங்கமணியை பிடிக்காத சேந்தமங்கலம் முன்னாள் எம்எல்ஏ-வான சந்திரசேகரன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்” என்றார்கள்.
தங்கமணியையும் பாஸ்கரையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கிறார் இபிஎஸ். நாமக்கல் தொகுதியில் பாஸ்கரை ஓரங்கட்ட ஸ்ரீதேவி மோகனை தயார்படுத்துகிறார் தங்கமணி. அதையும் மீறி பாஸ்கருக்கு நாமக்கல் தொகுதியைக் கொடுத்தால் அத்தனை எளிதில் அவரை ஜெயிக்க விட்டு விடுவார்களா?