பரிசுப் பொருட்களை கருவூலத்தில் ஒப்படைக்காமல் விற்பனை செய்த வழக்கில் இம்ரான் கான், மனைவிக்கு 17 ஆண்டு சிறை

அரசு கரு​வூல பரிசுப் பொருட்​கள் ஊழல் வழக்​கில் பாகிஸ்​தான் முன்​னாள் பிரதமர் இம்​ரான் கான், அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு தலா 17 ஆண்​டு​கள் சிறைத் தண்​டனை விதிக்​கப்​பட்டு உள்​ளது.

பாகிஸ்​தான் கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் கேப்​டன் இம்​ரான் கான் கடந்த 2018 ஆகஸ்ட் முதல் 2022 ஏப்​ரல் வரை பாகிஸ்​தான் பிரதம​ராக பதவி வகித்​தார். அப்​போது சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்​மான், இம்​ரான் கானுக்கு வைரங்​கள் பதிக்​கப்​பட்ட கைக்​கடி​காரத்தை பரி​சாக வழங்​கி​னார். பிரிட்​டனின் கிராஃப் நிறு​வனம் தயாரித்த இந்த கைக்​கடி​காரத்​தின் மதிப்பு ரூ.8.5 கோடி ஆகும்.

பாகிஸ்​தான் சட்ட விதி​களின்​படி பிரதமர், அதிபர் வெளி​நாட்டு பயணங்​களின்​போது பெறும் பரிசுப் பொருட்​களை அரசு கரு​வூலத்​தில் (தோஷ​கா​னா) ஒப்​படைக்க வேண்​டும். ஆனால் கைக்​கடி​காரத்தை இம்​ரான்​கான் கரு​வூலத்​தில் ஒப்​படைக்​காமல் மனைவி புஷ்ரா பீபி​யிடம் அளித்​தார். அவர், அந்த கைக்​கடி​காரத்தை விற்​பனை செய்ய முயன்றார்.

கைக்​கடி​காரத்தை வாங்க விரும்​பிய நிறு​வனம், அதன் மதிப்பு குறித்து கிராஃப் நிறு​வனத்​திடம் விசா​ரித்​தது. சவுதி இளவரசருக்​காக இரு சிறப்பு கைக்​கடி​காரங்​களை மட்​டுமே தயாரித்த கிராஃப் நிறு​வனம், அதில் ஒரு கைக்​கடி​காரம் விற்​பனைக்கு வரு​வது குறித்து சவுதி அரேபிய அரசுக்கு தகவல் தெரி​வித்​தது.

இதுதொடர்​பாக சவுதி அரேபிய அரசு தரப்​பில் பாகிஸ்​தான் பிரதமர் அலு​வல​கத்​தில் தகவல் கோரப்​பட்​டது. அப்​போது​தான் விலை உயர்ந்த கைக்​கடி​காரத்தை இம்​ரான் கான் அரசு கரு​வூலத்​தில் ஒப்​படைக்​காமல் மனை​வி​யிடம் அளித்​திருப்​பது தெரிய​வந்​தது.

தலா ரூ.1.64 கோடி அபராதம்: அரசு கரு​வூல பரிசுப் பொருட்​கள் ஊழல் தொடர்​பான வழக்கை இஸ்​லா​மா​பாத்​தில் உள்ள சிறப்பு நீதி​மன்​றம் விசா​ரித்​தது. இந்த வழக்​கில் நேற்று தீர்ப்பு வழங்​கப்​பட்​டது.

இதன்​படி பாகிஸ்​தான் முன்​னாள் பிரதமர் இம்​ரான் கான், அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு தலா 17 ஆண்​டு​கள் சிறை தண்​டனை விதிக்​கப்​பட்டு உள்​ளது. மேலும் இரு​வருக்​கும் தலா ரூ.1.64 கோடி அபராத​மும் விதிக்​கப்​பட்​டிருக்​கிறது.

பாகிஸ்​தானின் ராவல்​பிண்​டி​யில் உள்ள அடி​யாலா சிறை​யில் இம்​ரான் கானும் புஷ்ரா பீபி​யும் அடைக்​கப்​பட்டு உள்​ளனர். அந்த சிறைக்கு நேரில் சென்ற நீதிபதி ஷாரூக் அங்​கேயே தீர்ப்​பினை வழங்​கி​னார்.