ஒட்டுமொத்த தொழில் முதலீடுகளும் வந்துவிட்டதைப் போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்த முயன்ற திமுக அரசின் முகமூடி இப்போது கிழிந்து விட்டது என்று பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் ரூ.34,237.39 கோடி மதிப்பிலான 15 புதிய தொழில் முதலீட்டுத் திட்டங்களுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு செய்து கொண்ட ரூ.12.16 லட்சம் கோடி மதிப்பிலான 1,176 தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களில் 80 %-க்கும் கூடுதலான முதலீடுகள் செயல்பாட்டுக்கு வந்து விட்டதாக ஆட்சியாளர்கள் கூறி வந்த நிலையில், அவை அனைத்தும் பொய் என்பதை நிரூபிப்பதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட தொழில் முதலீட்டுத் திட்டங்கள் தான் மிகச் சிறந்த சான்றுகள் ஆகும்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட தொழில் முதலீட்டுத் திட்டங்களில் முதன்மையானது ஹூண்டாய் மகிழுந்து ஆலை விரிவாக்கத் திட்டங்கள் ஆகும். ஹூண்டாய் மகிழுந்து ஆலை விரிவாக்கம் தொடர்பாக அந்த நிறுவனம் தமிழக அரசுடன் இரு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. அவற்றில் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான முதலாவது புரிந்துணர்வு ஒப்பந்தம் 2023ம் ஆண்டு மே மாதம் 11ம் தேதி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது. இருங்காட்டுக் கோட்டையில் உள்ள ஹூண்டாய் மகிழுந்து ஆலையை விரிவுபடுத்துவது, மின்சார மகிழுந்துகளை தயாரிப்பதற்கான கட்டமைப்பை ஏற்படுத்துவது ஆகியவற்றுக்காக ரூ.20 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படும் என ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்தது.
இரண்டாவது ஒப்பந்தம் 2024ம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்திடப்பட்டது. ரூ.6,180 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தமும் ஹூண்டாய் மகிழுந்து நிறுவனத்தின் விரிவாக்கம் தொடர்பானது தான். மொத்தம் ரூ. 26,180 கோடி மதிப்பிலான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை; இதில் உறுதியளிக்கப்பட்டிருந்த தொகையில் ரூ.500 கோடி கூட இன்னும் முதலீடு செய்யப்படவில்லை என்பதை பலமுறை நான் சுட்டிக்காட்டியிருந்தேன்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 19ம் தேதி சென்னையில் நான் வெளியிட்ட ‘திமுக அரசின் பொய் முதலீடுகள்‘ என்ற தலைப்பிலான ஆவணத்திலும் இது குறித்து விரிவாக விளக்கியிருந்தேன். ஆனால், 80 %-க்கும் கூடுதலான முதலீடுகள் செயல்பாட்டுக்கு வந்து விட்டதாக திமுக அரசு மீண்டும், மீண்டும் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு வந்தது. ஆனால், ஹூண்டாய் நிறுவனத்தின் முதலீடுகளுக்கு நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தான் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது என்பதில் இருந்தே, அந்த நிறுவனம் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையிலான முதலீடுகள் இன்று வரை செயல்பாட்டுக்கு வரவில்லை என்பது உறுதியாகியிருக்கிறது. தொழில் முதலீடுகளைப் பொறுத்தவரை திமுக தொடக்கம் முதலே பொய்களைத் தான் கூறி வருகிறது என்பதற்கு இதை விட வேறு சான்றுகள் எதுவும் தேவையில்லை.
நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட மேலும் இரு தொழில் முதலீடுகளை செய்ய இருப்பவை கெயின்ஸ் சர்க்யூட் இந்தியா நிறுவனம், சென்னையைச் சேர்ந்த இராதா எஞ்சினியரிங் நிறுவனம் ஆகியவை ஆகும். இந்த நிறுவனங்கள் முறையே ரூ.4,995 கோடி, ரூ.1,500 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்திடப்பட்டன. அதேபோல், எவர்வான் கோத்தாரி நிறுவனம் ரூ.5,000 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த ஆண்டு பிப்.26ம் தேதியும், ஜான்சன் எலக்ட்ரிக் நிறுவனம் ரூ.1,300 கோடி முதலீடு செய்வதற்கான ஒப்பந்தம் அதே ஆண்டு நவம்பர் 25ம் தேதியும் கையெழுத்திடப்பட்டன. இவற்றின் முதலீட்டுத் திட்டங்களுக்கும் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தான் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்பதால் இந்த முதலீடுகளும் இன்னும் செயலாக்கம் பெறவில்லை என்பதை திமுக அரசே ஒப்புக்கொண்டிருக்கிறது.




