பொங்கலுக்குப் பிறகு தேமுதிக-வில் விருப்பமனு பெறப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிக மக்கள் மீட்பு மாநாடு 2.O வரும் ஜன.9-ம் தேதி கடலூரில் நடைபெறவுள்ள நிலையில், மாநாட்டு பணிகள் குறித்து நேற்று கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் கடலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: தேமுதிக-வின் மாநாடு, விஜயகாந்த் குருபூஜை, அதன் பின்னர் பொங்கல் என அனைத்தும் முடிந்த பின்னர் நான்காம் கட்ட சுற்றுப்பயணத்தைத் தொடங்க இருக்கின்றோம். அதற்கு முன்னதாக, யாருடன் கூட்டணி, எத்தனை தொகுதிகள், எந்தெந்தத் தொகுதிகள் என்பது குறித்து முடிவு செய்துவிட்டு பொங்கலுக்குப் பிறகு விருப்பமனு வாங்க இருக்கிறோம்.
பாமக சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாத தமிழக அரசைக் கண்டித்து புதன்கிழமை நடக்கக்கூடிய ஆர்ப்பாட்டத்துக்கு தேமுதிக-வுக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. நாங்களும் கடிதம் மூலம் போராட்டம் வெற்றி பெற ஆதரவு தெரிவித்து இருக்கிறோம்.
எந்தவொரு கட்சியுமே 234 தொகுதிகளையும் தான் இலக்காக கொள்ளும். விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த போதும் யாருடனும் கூட்டணி வைக்கவில்லை. அதேபோல், எங்கள் இலக்கும் 234 தொகுதிகளும் தான்.
யாருடன் கூட்டணி, யாரெல்லாம் வேட்பாளர், எத்தனை சீட், எந்தெந்தத் தொகுதி என்பது குறித்தெல்லாம் தலைமைக் கழகம் அறிவிக்கும். ஜனவரிக்குள் சுற்றுப்பயணம் மற்றும் விருப்ப மனு பெறுதலை முடித்து, பிப்ரவரி மற்றும் மார்ச்சில் தேர்தல் பிரச்சாரப் பயணத்தை தொடங்க உள்ளோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.





