சென்னையை சேர்ந்த திரு. ஹாஜா ஷேக் மன்சூர் என்பவர் கடந்த நவம்பர் 2023 ஆம் ஆண்டு மடகாஸ்கர் நாட்டிற்கு சுற்றுலா விசாவில் சென்றபோது தவறாக ஒரு வழக்கில் சிக்க வைக்கப்பட்டார். இதன் காரணமாக அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஒரு வருட சிறைத் தண்டனை விதித்தது. அந்த தண்டனை காலத்தை முழுமையாக அனுபவித்த பின் அவர் விடுதலை செய்யப்பட்டாலும், அங்கிருந்து இந்தியா திரும்பி வர தேவையான உதவிகள் இல்லாமல் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டார்.
கடந்த ஒண்ணரை ஆண்டுகளாக சரியான உணவும், உறைவிட வசதிகளும் இல்லாமல் மிகவும் கடினமான சூழ்நிலைகளில் மடகாஸ்கரில் தவித்து வந்தார். இந்த நிலையில் அவரை பாதுகாப்பாக இந்தியா திரும்பச் செய்ய வேண்டுமென அவரது மனைவி என்னிடம் கோரிக்கை விடுத்தார்.
அவரது கோரிக்கையைத் தொடர்ந்து, கடந்த 17.02.2026 அன்று மாண்புமிகு வெளியுறவுத்துறை அமைச்சர் திரு. ஜெய்சங்கர் அவர்களுக்கு நான் கடிதம் எழுதி, உடனடி தலையீடு செய்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டேன்.
அதனைத் தொடர்ந்து இந்திய வெளியுறவு துறை மற்றும் மடகாஸ்கரில் உள்ள இந்திய தூதரகம் இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டு அந்நாட்டு அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன் விளைவாக திரு. ஹாஜா ஷேக் மன்சூர் அவர்கள் தற்போது பாதுகாப்பாக இந்தியா திரும்பியுள்ளார்.
இன்று (12.03.2026) அவர் என்னை நேரில் சந்தித்து தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். அவரும் அவரது குடும்பத்தினரும் நீண்ட நாட்களாக எதிர்கொண்ட கவலை மற்றும் துயரத்திற்கு இப்போது முடிவு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை மேற்கொண்ட மாண்புமிகு வெளியுறவுத்துறை அமைச்சர் திரு. ஜெய்சங்கர் அவர்களுக்கும், வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகளுக்கும், மடகாஸ்கரில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
வெளிநாடுகளில் சிக்கி உதவி தேவைப்படும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்தியர்களுக்கு தேவையான உதவிகளை பெறச்செய்ய நான் தொடர்ந்து முயற்சி மேற்கொள்வேன். என
நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.




