மதுரையில் தீக்குளித்த இளைஞரின் உடற்கூராய்வு நிறைவு

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றக்கோரி தீக்குளித்த பூரணசந்திரன் உடற்கூராய்வு முடிந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அப்பகுதியில் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி நேற்று மதுரை தல்லாகுளம் அவுட் போஸ்ட் பெரியார் சிலை அருகே போலீஸ் பூத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட பூர்ண சந்திரனின் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடற்கூராய்வுக்காக வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து பூரணசந்திரன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பிணவறை பகுதியில் திரண்டனர்.

இதற்கிடையில் பூசந்திரனின் உடலை அரசு மருத்துவர்கள் உடற்கூராய்வு செய்தனர். அதாவது, காலை 9.30 மணிக்கு தொடங்கி, 10.15 மணிக்கு முடித்தனர். காவல்துறையினர் அவரின் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க முயற்சித்தனர். அப்போது அங்கு திரண்டு இருந்த பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பினர், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், காடேஸ்வர சுப்பிரமணியம் உள்ளிட்டோர் வந்த பிறகு தான் உடல் வாங்குவது குறித்து முடிவு செய்யப்படும் எனக் கோஷங்கள் எழுப்பினர். இதனால் போலீஸாரால் உடலை ஒப்படைக்க முடியவில்லை.

இருப்பினும் பாஜகவினர் மற்றும் இந்து முன்னணி அமைப்பினர், வாய்களில் கருப்பு துணியை கட்டி கொண்டு பிணவவறை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர் மருத்துவமனை நுழைவு வாயில் முன்பு திரண்டு அவர்கள் ‘வீரச் சந்திரனுக்கு வீரவணக்கம்’, ‘வீரச் சந்திரனை போற்றுவோம், திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவோம்’ என்ற கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதன் காரணமாக பிணவறை பகுதியில் பதற்றமான சூழல் உருவானது. 300-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பிணவறைப் பகுதியில் பதற்றமான சூழலே நிலவி வருகிறது.