மரண தண்டனை வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவு

வன்​கொடுமை தடுப்​புச் சட்​டத்​தில் பொய் சாட்சியம் அளிப்​போருக்கு மரண தண்டனை வழங்கப்படும் என்​பதை ரத்து செய்​யக் கோரி வழக்கு தொடர்ந்​தவரை, உச்ச நீதி​மன்​றத்தை அணுகு​மாறு உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது.

திருச்​சி​யைச் சேர்ந்த ஷாஸிம் சாகர், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: வன்​கொடுமை தடுப்​புச் சட்​டத்​தின் 3(2)(ஐ) பிரி​வில் பட்​டியலின அல்​லது பழங்​குடி​யினர் பிரிவைச் சாராத ஒரு​வர் வன்​கொடுமை வழக்​கில் பாதிக்​கப்​பட்ட பட்​டியலினத்​தவருக்கு எதி​ராக பொய் சாட்​சியம் அளித்​தால், அவருக்கு அதி​கபட்​ச​மாக மரண தண்டனை வழங்​கப்​படலாம் என்று கூறப்​பட்​டுள்​ளது.

இந்​தி​யா​வில் மரண தண்டனை அரி​தி​லும் அரி​தான வழக்​கு​களில் மட்​டுமே வழங்​கப்​படு​கிறது. மேலும், குடிமக்​களின் அடிப்​படை உரிமை​களை நடை​முறைப்​படுத்த நீதி​மன்​றத்​துக்கு அதி​காரம் அளிக்​கும் அரசி​யலமைப்​பின் 32-வது பிரி​வின் கீழ் மரண தண்டனையை மறு​பரிசீலனை செய்​ய​லாம் என்​றும் உச்ச நீதி​மன்​றம் ஏற்​கெனவே தீர்ப்​பளித்​துள்​ளது.

எனவே, வன்​கொடுமைத் தடுப்​புச் சட்​டத்​தில் மரண தண்டனை விதிக்​கும் பிரிவை செல்​லாது என அறிவிக்​க​வும், அது​வரை அந்​தப் பிரிவைச் செயல்​படுத்​தத் தடை விதித்​தும் உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது.

இந்த மனுவை நீதிப​தி​கள் அனிதா சுமந்த், குமரப்​பன் அமர்வு விசா​ரித்​தது. மத்​திய அரசுத் தரப்​பில், “உச்ச நீதி​மன்​றத்​தில் 2019 மற்​றும் 2023-ல் இதே கோரிக்​கை​யுடன் மனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்டு நிலு​வை​யில் உள்​ளன.

இந்த மனுவை அந்த மனுக்​களு​டன் சேர்த்து விசா​ரிக்​கலாம்” என்று தெரிவிக்​கப்​பட்​டது. இதையடுத்​து, “மனு​தா​ரர் உச்ச நீதி​மன்​றத்தை அணுகி, தேவை​யான நிவாரணம் பெறலாம்” என்று நீதிப​தி​கள் உத்தர​விட்​டனர்​.