மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் விஜயகாந்த் குணமடைந்து வீடு திரும்ப தலைவர்கள் வாழ்த்து

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

விஜயகாந்த், கடந்த 18-ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மருத்துவமனை நிர்வாகம், ‘விஜயகாந்த உடல்நிலை சீராக இல்லாததால் அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. இதையொட்டி இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது’ என தெரிவித்திருந்தது.

இதையடுத்து, விஜயகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் விருப்பம் தெரிவித்து வாழ்த்து செய்தி வெளியிட்டிருந்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியிருப்பதாவது:

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் பூரண குணம் பெற்று வீடு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அனைவரின் அன்புக்கும் உரித்தான ‘கேப்டன்’ விஜயகாந்த் விரைவில் பூரண நலம்பெற்று மக்கள் பணி தொடர இறைவனை வேண்டுகிறேன்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண நலம்பெற்று இல்லம் திரும்பவும், நாட்டு மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்றவும் பிரார்த்திக்கிறேன்.

பாமக தலைவர் அன்புமணி: உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் முழுமையான உடல்நலம் பெற்று, தனது வழக்கமான மக்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவர் பூரண குணம் அடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும். தொடர்ந்து மக்கள் பணியாற்ற வேண்டும்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் குணமடைந்து இல்லம் திரும்ப வேண்டும்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் முழு உடல்நலம் பெற்று, விரைவில் மீண்டுவர வேண்டும். தனது அன்றாடப் பணிகளைத் மீண்டும் தொடர வேண்டும்.