“முதல்வர் ஸ்டாலின் பெரிய இதயம் படைத்தவர். அவர் கூட்டணி கட்சிகளை அரவணைத்து அழைத்துச் செல்கிறார். எங்களுக்கு என்ன செய்யவேண்டுமோ செய்வார்” தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மதுரையில் கூறினார்.
மதுரை அனுப்பானடி பகுதியில் நடந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஒருவரின் இல்ல நிகழ்வில் அக்கட்சி மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை பங்கேற்றார். இதன்பின், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தேர்தல் கூட்டணி குறித்து பேசுவதற்கு அகில இந்திய கட்சி தலைமையே முடிவு செய்ய முழு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. எந்த சாமியும், ஆசாமியும் முடிவெடுக்க முடியாது.
கட்சி நிர்வாகிகள் அவரவர் தொகுதி, மாவட்டத்தில் பணியை செய்யவேண்டும். மாநில தலைவராக இருக்கும் நானே கூட்டணி குறித்து பேச முடியாது. இதில் யாராவது குறுக்குச்சால், முன்னுக்கு பின், போக நினைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கெனவே தேர்தல் கூட்டணி குறித்து யாரும் பேசக்கூடாது என, வேண்டுகோள் விடுததும், கண்டித்தும் இருக்கிறோம்.
எங்களது தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத் தில் பேசினாலே பிரதமரே வர மறுக்கிறாார். எங்களது மாநிலத் தலைமை குறித்து அண்ணாமலை கேள்வி எழுப்புகிறார். அமித்ஷா, மோடி முடிவெடுக்காமலா மாநிலத் தலைவராக இருந்தார். ஒருவேளை அவரை மடாதிபதிகள் நியமித்தார்களா என அவர் யோசிக்கவேண்டும்.
தேர்தல் கூட்டணி குறித்து கட்சியின் நிர்வாகிகள் கருத்து தெரிவிக்க ஆசைப்படலாம். ஆனால் அதை என்னிடம் தெரிவிக்கலாம். கட்சி தலைமைக்கு மெயில் அனுப்பலாம். எந்த நேரத்தில், எப்போது கருத்து சொல்லவேண்டுமோ அப்போது தான் சொல்லவேண்டும். முதல்வர் ஸ்டாலின் பெரிய இதயம் படைத்தவர். அவர் கூட்டணி கட்சிகளை அரவணைத்து அழைத்துச் செல்கிறார். எங்களுக்கு என்ன செய்யவேண்டுமோ செய்வார்.
இந்தியா கூட்டணிக்கு தமிழகத்திற்கு தலைமை தாங்குபவர் அவர். இந்தியளவில் சோனியா காந்தி. தமிழகம் மீது பாஜக அரசுக்கு அக்கறையில்லை. நிதி உள்ளிட்ட தமிழகத்திற்கான உரிமைகளை பறிக்கின்றன. தேர்தல் நேரத்தில் வந்த மத்திய பட்ஜெட்டிலும் தமிழகத்திற்காக பெரிதாக ஒன்றுமில்லை. பாஜக அதிமுகவை கபளீகரம் செய்து விழுங்கவேண்டும் என, நினைக்கிறது. இதன்படி, அக்கட்சியை மூன்றாக்கிவிட்டது. பாமகவையும் இரண்டாக பிரித்துள்ளது.





