வெளிநாடுகளுக்கு சென்று ஸ்கேன் பரிசோதனை மேற்கொண்டு, கருவின் பாலினத்தை தெரிவித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கருவுறுதலுக்கு முன் மற்றும் பிறப்புக்கு முந்தைய கருவின் தன்மை அறியும் தொழில்நுட்ப முறைகள் (பாலினதேர்வை தடை செய்தல்) சட்டத்தின்படி அமைக்கப்பட்ட மாநில மேற்பார்வை குழு கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது.
சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடந்த கூட்டத்தில் துறையின் செயலர் இந்த சட்ட செயல்பாடு களின் ஆய்வு நடைபெற்றது. சுகாதாரத்துறையின் அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கடந்த 1994-ல் பெண் குழந்தைகள் கருக்கலைப்பை தடுக்கும் நோக்கில் இயற்றப்பட்ட இந்த சட்டமானது 2003 -ல் திருத்தம் செய்யப்பட்டு கருவுறுதலுக்கு முன் பாலின தேர்வைதடை செய்யும் முறைகளும், சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.
இந்த சட்டத்தின்படி பதிவு பெற்ற அரசில் 1,727, தனியாரில் 7,343 என மொத்தம் மொத்தம் 9,070 ஸ்கேன் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் மண்டல வாரியாக திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது. முதல்கட்டமாக சென்னை, கோவை, மதுரை, கன்னியாகுமரி ஆகிய 6 மண்டலங்களில் நடைபெற்றதில், 2,492 தனியார், அரசுமருத்துவர்கள் பயிற்சி பெற்றனர்.
மாநிலத்தில் செயல்பட்டு வரும் உரிய அதிகாரிகள் மேற் கொள்ளும் செயல்பாடுகளை பரிசீலனை செய்து உரிய ஆலோசனைகளை இக்குழு வழங்கியது. சட்டத்தை பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வழிவகைகள் ஆய்வு செய்யப்பட்டது. வெளிநாடுகளுக்கு சென்று ஸ்கேன் பரிசோதனை மேற்கொண்டு, கருவின் பாலினத்தை தெரிவிக்கும் இந்தியர்கள் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 2025-ல் சட்ட விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 15 ஸ்கேன் மையங்கள் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், 38 மாவட்டங்களில் உள்ள ஆலோசனை குழுக்கள் மூலம் 1,747 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு 1,608 மையங்கள் 2025-ம் ஆண்டில் மட்டும் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
பாலினம் விகிதம் 2021-22 -ம் ஆண்டில் 934 என இருந்தது. தற்போது 2025-26-ம் ஆண்டில் 941 என உயர்ந்துள்ளது. மாநில மேற்பார்வைக் குழுவினை வலுப்படுத்தி, அதன் செயல்பாடுகளை பயனுள்ளதாக அமல்படுத்துவதன் மூலம், மாநிலத்தின் பெண்சிசுக்கொலைகள் குறைந்து பெண்களின் பாலின விகிதம் மேம்படும். இவ்வாறு அவர்கள் தெரி வித்தனர்.





