ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி முன்னாள் மாணவிகளின் அழகோவியங்கள்!

<div class="paragraphs"><p>கண்காட்சியில் ஓவியங்களை ஆர்வத்துடன் பார்வையிடும் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள். | படங்கள்: எஸ்.சத்தியசீலன் |</p></div>

கண்காட்சியில் ஓவியங்களை ஆர்வத்துடன் பார்வையிடும் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள். | படங்கள்: எஸ்.சத்தியசீலன் |

சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியின் நுண்கலைத் துறை சார்பில், அதன் முன்னாள் மாணவிகளின் கலைத் திறமையைக் கொண்டாடும் விதமாக ‘தி ஆர்ட் ஆஃப் பிகமிங்: ஸ்டெல்லா(ர்) அலுமினி கேன்வாஸ்’ என்ற பிரம்மாண்ட ஓவியக் கண்காட்சி லலித் கலா அகாடமியில் கடந்த 10-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நுண்கலைத் துறையின் முன்னாள் தலைவரும், கலை விமர்சகருமான அஷ்ரபி எஸ்.பகத் தொகுத்து வழங்கி வருகிறார்.

கலைஞர்களின் தனித்துவமான பாணி:

பட்டுத் துணியில் சாயங்களைப் பயன்படுத்தும் பீனு கோவிந்த் ராவ், ‘கியூபிஸ்ட் எக்ஸ்பிரஷனிசம்’ பாணியை வெளிப்படுத்தும் ஹரிணி குமார், மாறிவரும் பருவகாலங்களின் நிறங்களை வித்தியாசப்படுத்திக் காட்டும் ஹினா பட், உணர்ச்சிகள், உள்ளுணர்வுக்கு முக்கியத்துவம் தரும் கனவுலகக் காட்சியை படைக்கும் இசையரசி அண்ணாமலை, பழைய வீடுகள், சிதிலமடைந்த சுவர்களின் வழியே காலத்தின் மாற்றத்தை பதிவு செய்யும் லட்சுமி ஸ்ரீநாத், பார்வையாளரே சிற்பத்தின் ஓர் அங்கமாக மாறி, அதை ஆழமாக உணர்ந்து அனுபவிக்கும் படைப்பை உருவாக்கிய லலிதா சங்கர், ‘வார்ப்டு ஃபேன்டஸி’ ஓவியம்படைத்த மல்லிகா மாதவன், அலைகள், நீரோட்டங்களை காலத்தின் வெளிப்பாடாக சித்தரித்த பார்வதி நாயர், பார்வையாளர்களை ஆழ்ந்து சிந்திக்க வைக்கும் அடுக்குகளாக ஓவியத்தைப் படைத்த பூஜா எஸ்.ஐ., சுற்றுச்சூழல் பாதுகாப்பை உணர்த்தும் ப்ரீத்தா கண்ணன், அன்றாட வாழ்க்கை அனுபவங்களை எக்ஸ்பிரஷனிச நிறங்கள் மூலம் வெளிப்படுத்தும் பிரியா சுனீல், கனவுக்கும், எதார்த்தத்துக்கும் இடையிலான கற்பனை வெளிகளை ஆராயும் ரஜினி கிருஷ்ணன், மனித மனதின் நுணுக்கங்களை விளக்கும் ரீனா டி கோச்சார், காலத்தின் நிலையற்ற தன்மையை தியானம்போல காட்சிப்படுத்தும் சந்தியா கோபிநாத், மன அமைதி, உள்நிலை விழிப்புணர்வைத் தேடும் பயணத்தைக் காட்டும் ஷாலினி பிஸ்வஜித், இயற்கைக்கும், பாரம்பரியத்துக்குமான உரையாடல் போன்ற ஓவியத்தைப் படைத்த சுசேதா மிஸ்ரா ஓங்கார், கடலில் நிலம் கரைவது போன்ற தொடர் ஓட்டத்தை காட்சிப்படுத்தும் சுனிதா சவுத்ரி, இந்திய மினியேச்சர் ஓவிய மரபின் செழுமை, அமைதியை பிரதிபலிக்கும் படைப்பைத் தந்துள்ள பி.ஸ்வப்னா ரெட்டி, அண்டவெளியின் மர்மங்களை மனித அனுபவத்தோடு பிணைத்துக் காட்டும் தேஜோமயி மேனன், வாழ்வின் மூலத்தை நோக்கிய உள்முகப் பயணத்தை சித்தரிக்கும் உண்ணாமலை அண்ணாமலை.

இந்த 20 கலைஞர்களும்தான் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியின் முன்னாள் மாணவிகள். தற்போது பல்வேறு தளங்களில் தடம்பதித்துள்ள இவர்கள் 20 பேரையும் ஒன்றிணைக்கும் பாலமாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது. கண்காட்சியில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு ஓவியமும் அவர்களது தனித்துவமான பாணியையும், அவர்கள் கடந்து வந்த நீண்ட கலைப் பயணத்தையும் பிரதிபலிப்பதாக உள்ளன. கலை ஆர்வலர்கள், ஓவியர்கள், மாணவ, மாணவிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த ஓவியக் கண்காட்சி பிப்.16-ம் தேதி வரை நடைபெறுகிறது.

சமீபத்திய செய்திகள்