மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பெயரை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு நாளை மறுநாள் (டிச.18) சட்டநகல் எரிப்பு போராட்டம் நடைபெறும் என அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் எம்எல்ஏ சின்னதுரை தெரிவித்தார்.
கரூர் சுங்கவாயிலில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இன்று (டிச.16) அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநில குழு கூட்டம் நடைபெற்றது. அதில், மாநிலத் தலைவர் சின்னதுரை எம்எல்ஏ உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் எம்எல்ஏ சின்னதுரை பேசும்போது, “மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள ஏழை, எளிய மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை மாற்றி அமைப்பதற்காக நாடாளுமன்றத்தில் புதிய மசோதா ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
இந்தத் திட்டத்தின் நோக்கத்தை சிதைக்கும் வகையில் மாற்றம் செய்த மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே மசோதாவை நிறைவேற்றி உள்ளது. தேவைக்கேற்ப நிதியை ஒதுக்கீடு, தேவைக்கேற்ப வேலை வாய்ப்பு, இத்திட்டத்துக்கு மாநில அரசு கூடுதல் நிதியை ஒதுக்கவேண்டும் என திருத்தம் செய்துள்ளது.
இந்தத் திட்டத்தை சிதைப்பதற்காக பிரதமர் மோடி திட்டமிட்டு திட்டத்தின் பெயரை மாற்றி அமைத்து, அதன் விதிமுறைகளை திருத்தம் செய்துள்ளார். இதை வன்மையாக கண்டிக்கிறோம். வாழ்வாதார உத்தரவாத திட்டம் என்ற பெயர் மாற்றத்தை நாங்கள் ஏற்கவில்லை. மாறாக எதிர்கிறோம்.
நாளை மறுநாள் (டிச.18) நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு பெயர் மாற்ற சட்ட நகலை எரிக்கும் போராட்டம் நடத்துவது என கரூர் மாநில செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
குடிமனை பட்டாவுக்காக தொடர்ந்து போராடி வருகிறோம். அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்து வருகிறோம். நத்தம் புறம்போக்கு, அரசு புறம்போக்கில் குடியிருப்போருக்கு வீட்டுமனை பட்டாக்கள் கிடைக்கவில்லை. இனாம் நிலம், பஞ்சமி நிலம் ஆகிவற்றிற்கு பட்டா வழங்கவேண்டும். தமிழ்நாடு அரசு ஒன் டைம் திட்டத்தில் அனைத்து வகையான நிலங்களில் குடியிருப்போருக்கு உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்” என்றார்.





