போர் காரணமாக வான்வழிப் பாதை மூடப்பட்டதால், சென்னையிலிருந்து 60 பேருடன் துபாய்க்கு புறப்பட்ட விமானம் மீண்டும் சென்னை வந்து தரையிறங்கியது.
அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் காரணமாக, கடந்த 28-ம் தேதி முதல் ஐக்கிய அரபு நாடுகள், வளைகுடா நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள் இடையே விமான சேவைகள் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்திலும் 3 நாட்களாக விமான சேவைகள் ரத்தாகியுள்ளன. இந்நிலையில் துபாயில் சிக்கித் தவிக்கும் பயணிகள் வசதிக்காக, நேற்று முன்தினம் நள்ளிரவிலிருந்து சில விமானங்களை மட்டும் இயக்க துபாய் அரசு அனுமதித்தது.
இதையடுத்து, நேற்று முன்தினம் நள்ளிரவு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் குழந்தைகள், பெண்கள் உட்பட 217 பயணிகளுடன் துபாயிலிருந்து புறப்பட்டு சென்னைக்கு நேற்று அதிகாலை 2.15 மணிக்கு வந்தது.
இதனைத் தொடர்ந்து, துபாய் செல்ல முடியாமல் கடந்த 3 நாட்களுக்கு மேலாக சென்னை விமான நிலையத்தில் தவித்துக் கொண்டிருந்தவர்களை துபாய் அழைத்துச் செல்ல எமிரேட் ஏர்லைன்ஸ் விமானம் தயாரானது. 36 இந்திய பயணிகள், 12 வெளிநாட்டுப் பயணிகள், விமான ஊழியர்கள் 12 பேர் என மொத்தம் 60 பேருடன் விமானம் நேற்று அதிகாலை 3.53 மணிக்கு சென்னையிலிருந்து துபாய்க்கு புறப்பட்டது.
விமானம் மும்பையை கடந்து, அரபிக் கடல் பகுதியில் சுமார் 38 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டு இருந்தபோது, போர் சுழல் மீண்டும் அதிகரித்ததால், துபாய் வான்வழி மூடப்பட்டுள்ளதாக விமானிக்கு அவசரத் தகவல் வந்தது.
விமானி உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு, விமானத்தை மீண்டும் சென்னைக்கு திருப்பிக் கொண்டு வந்து தரையை இறக்குவதற்கு அனுமதி கேட்டார். அதற்கு கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் அனுமதி கொடுத்தனர்.
இதையடுத்து விமானம் திரும்பி வந்து சென்னையில் நேற்று காலை 7.20 மணிக்கு தரையிறங்கியது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும், விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்டு, சென்னையில் உள்ள ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
துபாயில் நிலைமை சீரடைந்து, வான்வழி பாதை மீண்டும் திறக்கப்பட்ட பிறகு, இந்த விமானம் மீண்டும் சென்னையிலிருந்து துபாய்க்கு புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
31 விமானங்கள் ரத்து போர் காரணமாக நேற்று 4-வது நாளாக துபாய், அபுதாபி, ஷார்ஜா, குவைத், மஸ்கட், தோஹா உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய 16 புறப்பாடு விமானங்கள், அங்கிருந்து சென்னைக்கு வரவேண்டிய 15 வருகை விமானங்கள் என மொத்தம் 31 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
ரத்து செய்யப்படும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதால், பயணிகள் விமான நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு பயணத்தை திட்டமிடுமாறு சென்னை விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். முதல் நாளில் 28 விமானங்கள், 2-வது நாளில் 33 விமானங்கள், மூன்றாவது நாளில் 36 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.





