அமெரிக்காவின் எப்-15ஈ போர் விமானத்திலிருந்து மாயமான கேணல் தர அதிகாரியை மீட்கும் நடவடிக்கையின் போது, பல அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான் கலங்கள் ஈரானியப் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக ஈரான் புரட்சிகர இராணுவம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி ட்ரம்ப் தனது அதிகாரியை மீட்டதாகப் பெருமிதம் தெரிவித்த அதேவேளையில், ஈரான் தரப்பிலிருந்து வெளியாகியுள்ள இந்தத் தகவல் போர்க்களத்தில் அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ள பாரிய இழப்புகளைச் சுட்டிக்காட்டுகிறது.
ஈரானின் மத்திய இராணுவக் கட்டளையகம் மற்றும் தஸ்நிம் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி,
இஸ்பஹான் மாகாணத்தின் தெற்குப் பகுதியில் அமெரிக்காவின் சி-130 ரக இராணுவப் போக்குவரத்து விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. அத்துடன், மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பிளாக் ஹாக் ஹெலிகொப்டர்களும் ஈரானியப் படைகளால் தகர்க்கப்பட்டுள்ளன.
அதேமாகாணத்தில் இஸ்ரேலுக்குச் சொந்தமான ஆளில்லா விமானம் ஒன்றும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல்கள் ஈரானின் வான்வெளி, தரைப்படை, பஸிஜ் மற்றும் பொலிஸ் கட்டளையகம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை மூலம் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“எதிரியின் பறக்கும் பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளன” என ஈரான் புரட்சிகர இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஜனாதிபதி ட்ரம்ப் “ஒரே ஒரு அமெரிக்க வீரர் கூட உயிரிழக்கவில்லை அல்லது காயமடையவில்லை” எனக் கூறி வரும் நிலையில், ஈரான் தரப்பிலிருந்து போக்குவரத்து விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்கள் வீழ்த்தப்பட்டதாக வெளிவந்துள்ள செய்தி, போரின் உண்மைத்தன்மை தொடர்பில் முரண்பட்ட கருத்துக்களை தோற்றுவித்துள்ளது.





