அமெரிக்க – இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் உளவுத் துறைத் தலைவர் மஜித் காதேமி கொல்லப்பட்டார்.
இது குறித்து ஈரானின் துணை ராணுவப் படையான இஸ்லாமிய புரட்சிகரப் பாதுகாப்புப் படை (ஐஆர்ஜிசி) தனது டெலிகிராம் சேனலில் வெளியிட்ட பதிவில், “அதிகாலையில் அமெரிக்க – சியோனிச எதிரிகள் நடத்திய தீவிரவாதத் தாக்குதலில், ஐஆர்ஜிசி உளவு அமைப்பின் வலிமையான மற்றும் கல்வி அறிவு மிக்க தலைவரான மேஜர் ஜெனரல் மஜித் காதேமி வீரமரணமடைந்தார்” என கூறப்பட்டுள்ளது.
இஸ்ரேல், ஈரான் இடையே கடந்த ஜூன் மாதம் நடந்த 12 நாள் போரில் ஐஆர்ஜிசி உளவு அமைப்பின் தலைவர் ஜெனரல் முகமது காசெமி கொல்லப்பட்டார். இதையடுத்து அவருக்கு பதிலாக காதேமி அந்தப் பதவியை ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரானில் உள்ள ஐஆர்ஜிசி-யின் உளவு அமைப்பு என்பது அதிக அதிகாரங்களைக் கொண்டுள்ளது. அத்துடன் அந்த அமைப்பு நாட்டின் உச்ச தலைவருக்கு மட்டுமே பதில் சொல்லக் கடமைப்பட்டது. இது பெரும்பாலும் மேற்கத்திய நாட்டினரை அல்லது வெளிநாட்டுத் தொடர்புகளைக் கொண்டவர்களைத் தடுத்து வைப்பதோடு தொடர்புடையது. மேலும், நாட்டின் மதவாத ஆட்சிக்கு எதிராகச் செயல்படுபவர்களை இலக்கு வைத்து, எல்லை தாண்டிய கொலைகள் மற்றும் தாக்குதல்களை நடத்தியதாகவும் இந்த அமைப்பு மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா படைகள் இன்று ஈரான் மீது நடத்திய தாக்குதலில் 30-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மற்றும் அதன் வளைகுடா நாடுகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. ஈரான் முழுவதும் இன்று குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டன.
இந்தப் பின்னணியில், அமெரிக்கா – ஈரான் இடையிலான போரை நிறுத்த வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. முதல்கட்டமாக 45 நாட்கள் போர் நிறுத்தத்தை அமல் செய்ய வேண்டும். ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் வரைவு திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
அதேவேளையில், ஈரான் வட்டாரங்கள் கூறும்போது, “அமெரிக்காவுடன் நாங்கள் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை. சில நாடுகள் சமரச முயற்சியில் ஈடுபட்டு உள்ளன. அந்த நாடுகளின் பிரதிநிதிகளுடன் தொடர்பில் உள்ளோம். தற்காலிக போர் நிறுத்தத்தை நம்பி ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க முடியாது. எந்தவொரு காலக்கெடுவையும் ஏற்க முடியாது” என்று தெரிவித்தன.
போர் நிறுத்த வரைவு திட்டம் தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு துறை செய்தித் தொடர்பாளர் தாஹிர் அன்ட்ராபி கூறும்போது, “இப்போதைய சூழலில் பகிரங்கமாக எந்த தகவலையும் வெளியிட முடியாது. அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பல்வேறு நிலைகளில் பேச்சுவார்த்தை நடக்கிறது” என்று தெரிவித்தார்.





