குறைந்தபட்சம் 10 லட்சம் அமெரிக்க டாலர் கட்டணம் செலுத்தி விரைவாக விசா பெருவதற்கான கோல்டு கார்டு திட்டத்தை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடங்கிவைத்தார்.
அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள் குடியேறுவதைக் கட்டுப்படுத்தவும், குடியுரிமை பெறுவதைக் கட்டுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை அதிபர் ட்ரம்ப் எடுத்து வருகிறார். இதனால், அமெரிக்காவில் வசித்து வந்த இந்தியர்கள் உட்பட பல வெளிநாட்டினர் நாடு கடத்தப்பட்டனர். பல அமெரிக்க நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களும் வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர்.
இந்நிலையில், இதற்கு தீர்வு காண வேண்டும் என பல்வேறு நிறுவனங்கள் அமெரிக்க அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தன. இதையடுத்து, இத்தகையவர்களுக்காக கோல்டு கார்டு திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என ட்ரம்ப் கூறி இருந்தார்.
அதன்படி, கோல்டு கார்டு திட்டத்தை புதன் கிழமை ட்ரம்ப் தொடங்கிவைத்தார். இத்திட்டத்தின் கீழ் விசா பெற விரும்புபவர்கள் அதற்கான இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இரண்டு வகையான விசா கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டணங்கள் மிக மிக அதிகம் என்பதால் இதற்கு விண்ணபிப்பவர்கள் மிகவும் குறைவாகவே இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனி நபர்கள் விசாவுக்காக விண்ணப்பிப்பதாக இருந்தால் அவர்கள் சேவைக் கட்டணமாக 15,000 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 13 லட்சம்) செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். இதையடுத்து, விண்ணப்பிக்கும் நபர் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும். மேலும், விண்ணப்பதாரரிடம் நேர்காணலும் நடத்தப்படும்.
விண்ணப்பம் ஏற்கப்படுமானால் அதன் பின்னர் விண்ணப்பதாரர் 10 லட்சம் டாலர் கட்டணம் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 9 கோடி) செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்தப்பட்ட பிறகு சில வாரங்களில் EB-1 அல்லது EB-2 விசா வழங்கப்படும். இந்த விசாவைப் பெறவதன் மூலம் ஒருவர் சட்டப்பூர்வ நிரந்தர குடியுரிமையைப் பெற முடியும்.
தாங்கள் விரும்பும் பணியாளர்கள் அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற நிறுவனங்களும் விண்ணப்பிக்க முடியும். நிறுவனங்கள் எனில் அதற்கான விசா கட்டணம் 20 லட்சம் டாலராகும்.
கோல்டு கார்டு திட்டத்தை தொடங்கிவைத்துப் பேசிய அதிபர் ட்ரம்ப், எனக்கும் நாட்டுக்கும் மிகவும் உற்சாகமான விஷயம் இது. ட்ரம்ப் கோல்டு கார்டு திட்டத்தை தொடங்கி உள்ளோம் என தெரிவித்துள்ளார்.





