வெனிசுவேலாவின் மிக மோசமான குற்றவியல் மற்றும் பயங்கரவாதக் குழுவான ‘ட்ரென் டி அராகுவா’ ( Tren de Aragua) அமைப்பின் சிரேஷ்ட தலைவர், அமெரிக்க இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விடயம் தொடர்பில் ‘டிரூத் சோஷியல்’ (Truth Social) சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி டிரம்ப்,
எனது நேரடி உத்தரவின் பேரில், அமெரிக்காவின் சதர்ன் கமாண்ட் (US Southern Command) படைகள் நடத்திய மிக வேகமான மற்றும் கடுமையான தாக்குதலில், ‘ட்ரென் டி அராகுவா’ குழுவின் தலைவர் ஹெக்டர் ரஸ்தன்போர்ட் குரேரோ புளோரஸ் (Hector Rusthenford Guerrero Flores) என்ற ‘நினோ குரேரோ’ (Niño Guerrero) கொல்லப்பட்டார் என தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் நடவடிக்கை வெனிசுவேலாவில் உள்ள நமது நட்பு நாடுகளின் பாதுகாப்புப் படைகளுடன் நெருக்கமாக ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட்டது.
இதன் விளைவாக, ‘ட்ரென் டி அராகுவா’ பயங்கரவாதிகளுக்கு வெனிசுவேலாவிலோ அல்லது வேறு எங்குமே இனி பாதுகாப்பான புகலிடம் கிடையாது.
எனது தலைமையின் கீழ், இந்த கொடூரமான கொலைக்காரர்களையும் போதைப்பொருள் கடத்தல்காரர்களையும் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் தேடிக் கண்டுபிடித்து, அவர்கள் சேர வேண்டிய நரகத்தின் ஆழத்திற்கு அனுப்புவோம் என்று கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.





