அரசியல் கட்சிகளின் மாணவர் சங்கங்களை கலைக்கும் புதிய நேபாள அரசாங்கம்

நேபாளத்தில் கட்சி சார்பு தலையீடுகளிலிருந்து கல்வித்துறையை விடுவிக்கும் நோக்கில் அனைத்து பல்கலைக்கழங்கள் மற்றும் பள்ளிகளில் உள்ள அரசியல் கட்சிகளின் மாணவர் சங்கங்களை கலைக்க அந்நாட்டின் புதிய அரசு உத்தரவிட்டுள்ளது. GeZ புரட்சியை அடுத்து ஆட்சிக்கு வந்த பிரதமர் பாலேந்திர ஷா தலைமையில் நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த 60 நாட்களுக்குள் கல்வி நிறுவனங்களில் இருந்து முழுமையாக இந்த அமைப்புகள் அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..இதற்குபதிலாக மாணவர்களின் உரிமைகளையும், உணர்வுகளையும் சரியாகப் பிரதிநிதித்துவப்படுத்த, ‘மாணவர் மன்றம்’ அல்லது ‘மாணவர் குரல்’ போன்ற அமைப்புகள் அடுத்த 90 நாட்களுக்குள் உருவாக்கப்படும் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

புதிய அரசு வெளியிட்டுள்ள ‘100 அம்ச ஆட்சி சீர்திருத்தத் திட்டத்தின்’ (100-Point Governance Reform Agenda) ஒரு பகுதியாக இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. நேபாள அரசின் இந்த அதிரடி முடிவுக்கு அந்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளின் மாணவர் அமைப்புகள் தங்களது கடும் கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் பதிவு செய்துள்ளன.

அரசின் இந்த நடவடிக்கையை “சித்தாந்தத்தின் மீதான தடை ” என்று மாணவர் அமைப்புகள் விமர்சித்துள்ளன. மாணவர்களின் அரசியல் உணர்வையும், உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் அதிகாரத்தையும் இது பறிப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். நேபாளி காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான நேபாள மாணவர் சங்கம், இந்த முடிவை அமல்படுத்துவது “நெருப்பில் கையை வைப்பதற்குச் சமம் என்று கடுமையாக எச்சரித்துள்ளது. மேலும், மாணவர் அமைப்புகளைக் கலைக்கும் முயற்சி அரசின் பின்னடைவுக்கே வழிவகுக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

.கல்வி நிறுவனங்களில் மாணவர் அமைப்புகள் இருப்பது ஜனநாயகத்தின் ஒரு பகுதி என்றும், மாணவர் நலன்களைப் பாதுகாப்பதில் இந்த அமைப்புகளுக்கு நீண்டகால வரலாறு உண்டு என்றும் அவற்றின் தலைவர்கள் வாதிடுகின்றனர். அரசின் இந்த ‘100 அம்சத் திட்டத்திற்கு’ எதிராக நாடு தழுவிய அளவில் போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாக ;பல்வேறு மாணவர் சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன..

இருப்பினும், கல்வி நிறுவனங்களில் இருந்து அரசியலை முழுமையாக அகற்ற வேண்டும் என்ற அரசின் முடிவுக்குப் பொதுமக்களிடையேயும், மற்ற மாணவர்களிடையேயும் கணிசமான வரவேற்பு கிடைத்துள்ளது.

 

சமீபத்திய செய்திகள்