இராஜதந்திர மோதல் ; ஜப்பானிய கடல் உணவு இறக்குமதியை தடை செய்யும் சீனா

இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர மோதல் தீவிரமடைந்து வருவதால், ஜப்பானிய கடல் உணவுகளின் அனைத்து இறக்குமதியையும் சீனா மீண்டும் தடை செய்யும் என ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பசிபிக் கடலில் விடப்பட்டுவரும் புக்குஷிமா அணு நிலையத்தின் சுத்திகரிக்கப்பட்ட நீரை மேலும் கண்காணிக்க வேண்டிய அவசியம் உள்ளதாக சீனா ஜப்பானுக்கு அறிவித்துள்ளது. இதனையடுத்து, சீனாவால் ஜப்பான் கடல் உணவுகளுக்கு மீண்டும் இறக்குமதி தடைவிதிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்தத் தடை நடைமுறைக்கு வரும் நேரம், பீஜிங்–டோக்கியோ இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ள சூழ்நிலையுடன் ஒத்துப்போகிறது.

ஜப்பான் பிரதமர் சனே தகாய்சி நவம்பர் மாதம் 7-ஆம் திகதி பாராளுமன்றத்தில் பேசியபோது, “தாய்வானின் மீது சீனா தாக்குதல் நடத்தி, அது ஜப்பானின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான நிலையை உருவாக்கினால், டோக்கியோ இராணுவ நடவடிக்கை எடுக்கக்கூடிய சில சூழ்நிலைகளில் அது ஒன்றாகும்” என தெரிவித்துள்ளார்.

இந்தக் கருத்துகள் சீனாவில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளதால் இரு நாடுகளின் உறவில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளதாக மதிப்பிடப்படுகிறது.

ஜப்பான் பிரதமர் தகாய்சியின் கருத்துகள் சீன அதிகாரிகள் மற்றும் அந்நாட்டு அரச ஊடகங்களின் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இதன் பின்னர், சீனாவில் உள்ள ஜப்பான் பிரஜைகள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை எடுக்கவும், கூட்டம் அதிகமாகும் பகுதிகளைத் தவிர்க்கவும் டோக்கியோ அரசு அறிவுறுத்தியது.

தகாய்சியின் கருத்துகளுக்குப் பின்னர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ஓசாகாவில் உள்ள சீனத் தூதரகத்தின் தூதர் சுஏ ஜியான், ஜப்பான் பிரதமரை குறிக்கும் விதத்தில் “அந்த அசுத்தமான கழுத்தை வெட்டி எறிவோம்” என மிரட்டல் விடுத்தார்.

பின்னர் அந்தப்பதிவு அழிக்கப்பட்டதை தொடர்ந்து, சீன தூதரை அழைத்து விளக்கம் கோரப்பட்டதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.

ஜப்பானுக்கு பயணம் செய்ய வேண்டாம் என சீன குடிமக்களுக்கு  பீஜிங் அறிவுறுத்தியுள்ளது. மேலும், தகாய்சி தனது கருத்துக்களை திரும்பப்பெற வேண்டும் என்றும் கோரியுள்ளது. இதற்கு பதிலாக, டோக்கியோ அரசு, அந்த கருத்துக்கள் அரசின் நிலைப்பாட்டிற்கு ஏற்பவே உள்ளதாக தெரிவித்துள்ளது.