இறக்கும் நிலைக்கு சென்ற யானை : காப்பாற்றிய அறக்கட்டளையினர் !

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள கென்யா நாட்டின் சாவோ தேசிய பூங்காவில், ஆண் யானை ஒன்று தனது தந்தத்தை தும்பிக்கையால் வருடிக்கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக தந்தம் தும்பிக்கைக்குள் குத்திக் கொண்டது.

இதனால் அந்த யானை, சுமார் மூன்று நாட்களாக அதே நிலையில் சிக்கி, இரை எடுக்கவும், நீர் அருந்தவும், முறையாக சுவாசிக்கவும் முடியாத நிலையில் இருந்தது. பசி மற்றும் தாகம் காரணமாக உயிருக்கு ஆபத்தான நிலையிலும் யானை இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையை அவதானித்த ஷெல்ட்ரிக் வனவிலங்கு அறக்கட்டளை குழுவினர், கென்யா வனவிலங்கு சேவையுடன் இணைந்து மீட்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர். அதன்படி, யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்ட பின்னர், தந்தத்தில் சிக்கியிருந்த தும்பிக்கை கவனமாக அகற்றப்பட்டது.

மேலும், தும்பிக்கையில் ஏற்பட்டிருந்த காயங்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டதுடன், யானையின் உயிர் வெற்றிகரமாக காப்பாற்றப்பட்டதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.