எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத் தொடரில் பங்கேற்க இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நியூயோர்க் நகருக்கு விஜயம் செய்யும் போது, அவரைக் கைது செய்வதற்கான சட்டரீதியான சாத்தியக்கூறுகள் தொடர்பில் நியூயோர்க் நகர மேயர் ஜோஹ்ரன் மம்தானி மாநகர சட்டத் திணைக்களத்துடன் ஆலோசனைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.
தி நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் இதனை உறுதிப்படுத்திய அவர், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் நெதன்யாகுவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை மேற்கோள்காட்டி, சட்டம் அனுமதிக்கும் வரம்பிற்குள் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
எனினும், ஐக்கிய நாடுகள் சபை உடன்படிக்கைகளின் கீழ் உலகத் தலைவர்களுக்கு வழங்கப்படும் இராஜதந்திர விலக்குரிமை காரணமாக, பொதுச்சபை கூட்டத் தொடரில் பங்கேற்கும் வெளிநாட்டு தலைவரை உள்ளூர் அல்லது மாநில பொலிஸாரால் கைது செய்வது நடைமுறையில் சாத்தியமற்றது என சர்வதேச சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் ஒப்பந்தத்தில் அமெரிக்கா இணைந்த நாடாக இல்லாததால், அந்த நீதிமன்றத்தின் பிடியாணையை அமெரிக்காவில் அமல்படுத்த வேண்டிய சட்டப்பூர்வ கடப்பாடு இல்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில், மேயர் ஜோஹ்ரன் மம்தானியின் கருத்துக்கு இஸ்ரேல் தரப்பில் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேயர் மம்தானி இரகசியமாக அமெரிக்காவை வெறுப்பவர் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றம் சாட்டியுள்ளார்.
“நெதன்யாகு திட்டமிட்டபடி செப்டம்பரில் நியூயோர்க் வந்து ஐ.நா சபையில் பெருமையோடு உரையாற்றுவார். இதில் எந்த மாற்றமும் இல்லை. உண்மையில் யாரையாவது கைது செய்ய வேண்டும் என்றால், அது நியூயோர்க்கை சரியாக நிர்வகிக்கத் தவறிய மேயர் மம்தானியைத்தான்” என எக்ஸ் தளத்தில் ஐ.நா.விற்கான இஸ்ரேலிய தூதுவர் டேனி டானோன் பதிவிட்டுள்ளார்.





